Last Updated:
2021 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது இந்திய கிரிக்கெட் அணியின் ஆலோசகராக தோனி தற்காலிகமாகச் செயல்பட்டிருந்தார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இடம் பிடித்திருக்கிறார். இருப்பினும், அவரால் இந்திய அணியின் பயிற்சியாளராக முடியாது. அதற்கு சில காரணங்கள் உள்ளன.
ஐசிசி ஆண்டுதோறும் சிறந்த வீரர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு ஹால் ஆஃப் ஃபேம் விருதுகளை வழங்கிக் கௌரவித்துள்ளது. இந்த நிலையில், தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹேடன், தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர்கள் ஸ்மித், ஹாசிம் ஆம்லா உள்ளிட்டோர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
2004 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக தோனி அறிமுகமானார். 2007 ஆம் ஆண்டு இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக சிறப்பாகச் செயல்பட்ட தோனி, டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.
அதைத் தொடர்ந்து, 2011 இல் ஐசிசி உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் 2013இல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஆகியவற்றில் தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியது. இந்திய அணிக்காக 350 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, 10 ஆயிரத்து 733 ரன்கள் எடுத்திருக்கிறார்.
90 டெஸ்ட் போட்டிகளில் தோனி 4876 ரன்கள் எடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெற்ற பின்னர், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
சர்வதேச அரங்கில் கடைசியாக அவர் 2019 ஆம் ஆண்டு நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் விளையாடினார். தோனிக்கு ஹால் ஆஃப் ஃபேம் விருது ஐசிசி வழங்கிக் கௌரவித்தாலும், அவரால் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மாற முடியாது. அதற்கான தகுதிகள் அவருக்கு இன்னும் ஏற்படவில்லை.
அதாவது, தோனி சென்னை அணியின் கேப்டனாக ஆக்டிவாக விளையாடி வருவதால், அவர் இந்திய அணியின் பயிற்சியாளராக முடியாது. அல்லது இந்திய அணியில் பயிற்சி தொடர்பாக நிரந்தரப் பொறுப்பை வகிக்க முடியாது. இருப்பினும், ஆலோசகராகத் தற்காலிகமாகப் பணியாற்றலாம். 2021 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது இந்திய கிரிக்கெட் அணியின் ஆலோசகராக தோனி தற்காலிகமாகச் செயல்பட்டிருந்தார்.
June 10, 2025 5:53 PM IST


