Last Updated:
விமான நிலையத்தில் இந்திய மாணவரிடம் அமெரிக்க அதிகாரிகள் கடுமையாக நடந்துகொண்ட காட்சி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நேவார்க் விமான நிலையத்தில் இந்திய மாணவரிடம் அமெரிக்க அதிகாரிகள் கடுமையாக நடந்துகொண்ட காட்சி வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேவார்க் விமான நிலையத்திற்கு வந்த இந்திய மாணவர் ஒருவரை காவல்துறையினர் கைவிலங்கிட்டு தரையில் போட்டு அழுத்தினர். தான் எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை என்று அந்த மாணவர் கதறிய நிலையில், உதவி செய்ய யாரும் முன்வரவில்லை.
இதனை அவ்வழியாகச் சென்ற அமெரிக்க வாழ் இந்தியரான குணால் ஜெயின் என்பவர் வீடியோவாகப் பதிவு செய்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஒரு தீவிரவாதியைக்கூட காவலர்கள் இப்படி நடத்தமாட்டார்கள் என்று கூறிய ஜெயின், மாணவரும் சற்று வன்முறை காட்டும் விதமாக நடந்துகொண்டார் எனத் தெரிவித்தார்.
மேலும் அந்த மாணவர் இந்தியில் பேசிக்கொண்டிருந்ததாகவும், அது அங்கிருந்த அதிகாரிகளுக்குப் புரியவில்லை என்று குறிப்பிட்ட ஜெயின், இந்திய மாணவருக்குத் தான் உதவ முன்வந்தபோதும் அதனைக் காவலர்கள் அனுமதிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
சமூக வலைதளங்களில் வெளியான காட்சியை அடுத்து நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் உள்ளூர் அதிகாரிகளிடம் விசாரணையைத் தொடங்கியிருக்கின்றனர்.
June 10, 2025 1:15 PM IST
இந்திய மாணவருக்கு கைவிலங்கிட்டு தரையில் போட்டு அழுத்திய அமெரிக்க அதிகாரிகள்..! வீடியோ வெளியாகி பரபரப்பு


