சீனாவில் ஒரு குடும்பம் தன் மகளுக்கு திருமண சீர் என 100 சிவெட் பூனைகளை வழங்கியிருப்பது சர்வதேச வினோதங்களாக செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் வெளியிட்டிருக்கும் செய்தியில், 22 வயது மகளுக்கு ஒரு பெற்றோர் திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். தன் மகளுக்கு சீர் என 25 தங்கக் கட்டிகள், $20,000 ரொக்கம் (ரூ.17,13,297) , $11,500 (ரூ.9,85,145) மதிப்புள்ள நிறுவனப் பங்குகள், ஏழு சொத்துக்கள் இவைகளுடன் 100 சிவெட் பெண் பூனைகள் (அதன் இந்திய மதிப்பு ரூ.59,96,539) வழங்கியிருக்கின்றனர். மணமகன் வீட்டார் 10 தங்கக் கட்டிகள், $7,600 ரொக்கம் மற்றும் வைர நகைகளை வழங்கியிருக்கின்றனர்.
சிவெட் பூனைகள்:
சிவெட் (Civet) பூனை குடும்பத்தை சேர்ந்தவை போல தோன்றினாலும், உண்மையில் Viverridae என்னும் விலங்குக் குடும்பத்தைச் சேர்ந்தவை. சிறிய-நடுத்தர அளவிலான விலங்குகள். ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா காடுகளில் அதிகம் காணப்படும் இந்த விலங்குகளின் சுரப்பிகள் அதிகம் மணக்கக்கூடியவை. காபி லுவக் (Kopi Luwak) இந்த சிவெட் பூனைகளின் கழிவில் இருந்து பெறப்படும் காபியாகும். உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த காபியாகவும் கூறப்படுகிறது.

