Last Updated:
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், அதிபர் ட்ரம்புக்கு எதிரான போராட்டத்தின் போது, பெண் நிருபர் லாரன் டொமாசி மீது காவல்படை வீரர் ரப்பர் தோட்டாவால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், அதிபர் ட்ரம்புக்கு எதிரான போராட்டத்தின் போது நேரலை செய்திகளை வழங்கிக் கொண்டிருந்த பெண் நிருபர் மீது, அமெரிக்க காவல்படை வீரர் ஒருவர் ரப்பர் தோட்டாவால் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்களை நாடு கடத்தும் முயற்சியில் அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தீவிரமாக இறங்கியுள்ளார். குடிபெயர்ந்தவர்களை கண்டறிந்து கைது செய்ய லாஸ் ஏஞ்சல்ஸில் சுமார் 2000 பேர் அடங்கிய தேசிய காவல்படையை முடுக்கிவிட்டுள்ளார். இவர்கள் நகரின் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக லாஸ் ஏஞ்சல்ஸின் பாரமவுண்ட் பகுதியில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் தென்னமரிக்காவைச் சேர்ந்த பூர்வீக ஹிஸ்பானிக்கள் என்பதால் அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் அரங்கேறி வருகின்றனர்.
இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட புலப்பெயர்ந்தோர்களை தேசிய காவல்படை கைது செய்துள்ளது. ட்ரம்பின் இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக அமெரிக்க மக்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். ட்ரம்பின் இந்த நடவடிக்கைக்கு கலிபோர்னியா கவர்னர் கெவின் நியூசம், லாஸ் ஏஞ்சல்ஸின் மேயர் கரேன் பாஸ் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காவல்படையினரின் நடவடிக்கையால் நகரில் பதற்றம் அதிகரித்துள்ளது. அதிபர் ட்ரம்ப்பின் இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக லாஸ் ஏஞ்சல்ஸில் பொதுமக்கள் பலரும் கடந்த மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களை கூட்டம் சேர விடாமல் தேசிய காவல்படையும், லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசாரும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர். பதிலுக்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் போலீசார் மீது கற்களை எறிந்து எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடும் பதற்றம் நிலவி வரும் நிலையில், அமெரிக்காவின் முக்கிய செய்தி நிறுவனங்கள், செய்தி சேகரிப்பதற்காக போராட்டக் களத்தில் குவிந்துள்ளனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 9 நியூஸ் செய்தி நிறுவனத்தின் அமெரிக்க நிருபராக பணியாற்றி வரும் லாரன் டொமாசி என்கிற பெண் நிருபர் போராட்டக் களத்தில் தனது கேமரா மேனுடன் நேரலை செய்திகளை வழங்கிக் கொண்டிருந்தார். போராட்டக் காரர்களை விரட்டுவதற்காக ரப்பர் குண்டுகள் அடங்கிய துப்பாக்கிகளுடன் காவல்படையினர் வரிசை கட்டி நின்றிருந்தனர். அப்போது நிருபர் லாரன் காவல்படையினரை சுட்டிக் காட்டி நேரலையில் பேசிக் கொண்டிருந்த போது, துப்பாக்கி ஏந்திய வீரர் ஒருவர் என்ன நினைத்தாரோ? திடீரென லாரனின் இடது காலை குறிபார்த்து சுட்டுள்ளார்.
ரப்பர் தோட்டா பெண் நிருபரின் காலை பதம் பார்க்க அதிர்ந்து போன அவர் கால்களைப் பிடித்துக் கொண்டு நொண்டியபடி அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். இந்தத் தாக்குதலில் லாரனின் காலில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது கேமராமேன் நீங்கள் ஒரு நிருபரை சுட்டு விட்டீர்கள் என கத்தியுள்ளார்.
இதையடுத்து இருவரும் பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர். காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற்ற பின் தொடர்ந்து போராட்டக் களத்தில் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார் லாரன் டொமாசி. செய்தியாளர் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
June 09, 2025 9:27 PM IST
பெண் நிருபர் மீது துப்பாக்கி சூடு.. அதிபர் ட்ரம்புக்கு எதிரான போராட்டத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்


