Last Updated:
Volleyball Tournament | பார்வையற்றவர்களுக்கு மாநில அளவிலான கைப்பந்து போட்டி. வெற்றி பெற்ற அணியினருக்குப் பரிசுகள் வழங்கிக் கௌரவிப்பு.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் விழிகள் அறக்கட்டளை மூலம், விழுப்புரம் மற்றும் தர்மபுரி கைப்பந்து அணிகள் இணைந்து நடத்தும் பார்வையற்றோர் மாநில அளவிலான ஒருநாள் கைப்பந்து போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்தக் கைப்பந்து போட்டியில் சென்னை, விழுப்புரம், தருமபுரி, தேனி, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் கலந்துகொண்டன. கைப்பந்து போட்டி காலை 10 மணிக்குத் துவங்கிய நிலையில், மாலை 6 மணியளவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தருமபுரி மற்றும் கன்னியாகுமரி அணிகள் மோதியதில் தருமபுரி அணி வெற்றிபெற்றது. ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளும் தங்களுடைய திறமையை நேர்த்தியாக வெளிப்படுத்தினர்.
வெற்றிபெற்று முதலிடத்தைப் பிடித்த தருமபுரி அணி வீரர்களுக்குச் சிறப்பு அழைப்பாளர்கள் கோப்பையும், 10 ஆயிரம் ரூபாய் பரிசும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கிக் கௌரவித்தனர். அதேபோன்று இரண்டாம் இடம் பிடித்த கன்னியாகுமரி அணியினருக்கு 7,500 ரூபாய் பணமும், பாராட்டுச் சான்றிதழும், கோப்பையும், அதேபோன்று 3ஆம் இடம் பிடித்த சென்னை அணியினருக்கு 5000 ரூபாய் பணமும், பாராட்டுச் சான்றிதழும், கோப்பையும் வழங்கிக் கௌரவித்தனர். இந்நிகழ்வில், 12 மாவட்டங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பார்வையற்றவர்கள் கலந்துகொண்டனர்.
June 09, 2025 5:57 PM IST

