Last Updated:
குஜராத்தில் போலீசார் தன்னை பிடிக்க வந்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்ட குற்றவாளி, அடுக்குமாடிக் குடியிருப்பின் ஐந்தாவது மாடியிலிருந்து குதித்து விடுவேன் என போலீசாரை மிரட்டிய பதைபதைக்கச் செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
குஜராத் மாநிலத்தில்துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட பல வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர் தான் அபிஷேக் தோமர். போலீசாரிடம் சிக்காமல் தண்ணி காட்டி வந்த தோமர் அகமதாபாத்தில் உள்ள சிவம் அவாஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இந்த முறை விடக் கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிய போலீசார் அபிஷேக் தோமர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பை சுற்றி வளைத்தனர்.
ஐந்தாவது மாடியில் தோமருக்கு போலீசார் சுத்து போட்டு விட்டனர் என்பது கடைசியில் தான் தெரியவந்துள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் போலீசார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வரப் போகிறார்கள், என்ன செய்து என யோசித்த அபிஷேக் தோமர் சமையல் அறை ஜன்னலை திறந்து கொண்டு வெளியேறியிருக்கிறார். கரணம் தப்பினால் மரணம் என்கிற நிலையில் ஐந்தாவது மாடியின் ஜன்னல் ஓரம் இருந்த ஸ்லாப்பில் நின்றபடி ஒரு மூளையில் நின்றிருக்கிறார் அபிஷேக். கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்த போலீசார் ஆளை காணாமல் தவித்துள்ளனர்.
ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தால் உயிரைக் கையில் பிடித்தபடி கண்ணில் மரண பயத்துடன் நின்றிருந்த அபிஷேக் அருகில் வந்தால் குதித்து விடுவேன் என மிரட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். சரணடைந்து விடுமாறு போலீசார் எச்சரித்தனர். ஆனால் “சரணடைவதை விட சாவதே மேல்” என்று அபிஷேக் போலீசாரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். “சிறைக்கு சென்ற பின் நீங்கள் என்னை எவ்வளவு மோசமாக நடத்துவீர்கள் என்பது எனக்குத் தெரியும். அதற்கு மரணமடைவதே மேல்” என்று அபிஷேக் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்.
சுவற்றின் ஓரத்தில் நின்றபடி அபிஷேக் தோமர் மிரட்டல் விடுத்ததை பார்த்ததும், ஏராளமானோர் கீழே கூடினர். போலீசார் அவரை கண்ணியமாக நடத்துவதாக சத்தியம் செய்தனர். ஆனால் அதை அபிஷேக் நம்பவில்லை. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர, தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். போலீசார் மற்றும் தீயணைப்புப் படையினர் இணைந்து சுமார் மூன்று மணி நேரம் போராடி கெஞ்சிக் கூத்தாடி, அபிஷேக்கை பத்திரமாக கீழே இறக்கினர். சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
June 08, 2025 8:51 PM IST


