Last Updated:
பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை உயர்த்த கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கான நிவாரணம் அதிகரித்து கர்நாடகா அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியது. இதனைக் கொண்டாடும் விதமாக, ஆர்சிபி வீரர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் பெங்களூருவில் வெற்றிப் பேரணி திட்டமிடப்பட்டது.
ஆனால், அந்த வெற்றிக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என முதலமைச்சர் சித்தராமையா கேட்டுக்கொண்டார். மேலும், இந்த சம்பவத்திற்கு ஆர்சிபி அணி தனது மன்னிப்பைக் கேட்டுக்கொண்டது.
இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது. மேலும், குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்தது.
இந்த விவகாரத்தில் ஆர்சிபி அணி நிர்வாகிகள், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான டி.என்.ஏ. நிறுவன அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. மேலும், கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்ததற்கு தார்மீகப் பொறுப்பேற்று கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கச் செயலாளர் சங்கர் மற்றும் பொருளாளர் ஜெயராம் ஆகியோர் பதவி விலகினர்.
இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு வழங்கப்படும் 10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையை 25 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
June 08, 2025 8:50 AM IST


