Last Updated:
சமூக வலைதளங்களில் வெளிப்படையாக, டிரம்பும்- மஸ்க்கும் மோதிக்கொண்டதன் காரணமாக ஒரே நாளில் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் 13 லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்தன.
அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான மோதலுக்குப் பிறகு, எலான் மஸ்க் புதிய கட்சி தொடங்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிபர் டிரம்ப் கொண்டு வந்துள்ள ‘பிக் அண்ட் பியூட்டிஃபுல் பில்’ காரணமாக, அவருக்கும் நண்பரும் பெரும் கோடீஸ்வரருமான எலான் மஸ்க்கிற்கும் மோதல் வெடித்தது. எக்ஸ் வலைதளத்தில் மஸ்க்கும், தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் டிரம்பும் மாறி மாறி வசைபாடினர். அப்போது, அமெரிக்காவிற்குப் புதிய கட்சி வேண்டுமா எனத் தனது ஃபாலோயர்களிடம் மஸ்க் கேள்வி ஒன்றை முன்வைத்தார். அதற்கு, “வேண்டும்” என 80 சதவிகிதம் பேர் பதில் அளித்ததாக மஸ்க் பதிவிட்டார். புதிய கட்சிக்கு The American Party எனப் பெயர் வைக்கப்படும் என்றும் மஸ்க் பதிவிட்டார்.
இந்நிலையில், மஸ்க் கடுமையாக எதிர்த்த ‘பிக் அண்ட் பியூட்டிஃபுல் பில்’-லை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். புத்தியை இழந்துவிட்ட மஸ்க் உடன் இனி எப்போதும் பேசப் போவதில்லை என டிரம்ப் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
சமூக வலைதளங்களில் வெளிப்படையாக, டிரம்பும்- மஸ்க்கும் மோதிக் கொண்டதன் காரணமாக ஒரே நாளில் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் 13 லட்சம் கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்தன. மஸ்க்கின் தனிப்பட்ட சொத்து மதிப்பு சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் வரை குறைந்தது. டிரம்ப் அமெரிக்க அதிபராக வெற்றி பெற்று, மஸ்க்குடன் நெருக்கம் காட்டிய நடப்பு ஆண்டில் மட்டும் டெஸ்லா நிறுவனம், சந்தை மதிப்பில் 32 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாயை இழந்துள்ளது. உலக அளவில், மதிப்பு மிக்க நிறுவனங்களின் பட்டியலில் 8-வது இடத்தில் இருந்த டெஸ்லா, பத்தாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் மட்டும் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் 22 சதவிகிதம் சரிந்துள்ளன. இது “அற்புதமான ஏழு” என அழைக்கப்படும் தொழில்நுட்ப நிறுவனங்களில் மிகவும் மோசமான சரிவாகும். ஆப்பிள், மைக்ரோசாப்ட், அமேசான், ஆல்பாபெட், மெட்டா, என்விடியா மற்றும் டெஸ்லா ஆகியவை “அற்புதமான ஏழு” நிறுவனங்கள் என அழைக்கப்படுகின்றன.
இதனிடையே டிரம்ப் மற்றும் மஸ்க் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக ரஷ்யாவின் முன்னாள் பிரதமர் டிமிட்ரி மெட்வதேவ் கூறியுள்ளார். இதற்கான ஊதியத்தை ஸ்டார் லிங்க் நிறுவனத்தின் பங்குகளாகப் பெற்றுக்கொள்வதாகவும் மெட்வதேவ் தெரிவித்துள்ளார். மெட்வதேவின் மத்தியஸ்த திட்டத்திற்குச் சிரிக்கும் எமோஜியைப் பதிலாக எலோன் மஸ்க் பதிவிட்டுள்ளார்.
June 08, 2025 10:06 AM IST


