Last Updated:
முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது.
முதலீட்டாளர்களை ஈர்க்க தனியார் நிறுவன ஊழியர்கள் 10 மணி நேரம் வேலை செய்ய அனுமதிக்கும் சட்டத் திருத்தம் ஆந்திர மாநிலத்தில் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேசிய அளவில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் கட்சி ஆளும் ஆந்திராவில் தொழிலாளர்கள் பணி நேரத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஆந்திரா மாநிலத்தின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் கே. பார்த்தசாரதி கூறியிருப்பதாவது, “இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலம், முதலீட்டாளர்களை அதிக அளவில் ஈர்க்க முடியும். அனைத்து மாநிலங்களிலும், உலகமயமாக்கல் நிகழ்ந்துவருகிறது. உலக விதிகளை அமல்படுத்த இந்தத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
”ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஒன்பது மணிநேர வேலை நேரத்தை அனுமதிக்கும் தொடர்புடைய சட்டப் பிரிவுகள் இப்போது ஒரு நாளைக்கு 10 மணிநேரமாக உயர்த்தப்பட்டுள்ளன. பிரிவு 55 இன் கீழ் ஐந்து மணி நேர வேலைக்கு ஒரு மணி நேரம் ஓய்வு இருந்தது, இப்போது அது ஆறு மணி நேரமாக மாற்றப்பட்டுள்ளது,” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு அம்மாநில சிபிஐ மாநில செயலாளர் கே. ராமகிருஷ்ணா கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, “பெரிய தொழிலதிபர்களை திருப்திப்படுத்த விதிகளைத் திருத்துமாறு மத்திய அரசின் அழுத்தத்தில் மாநிலம் உள்ளது. இந்தத் திருத்தங்கள் தொழிலாளர்களை அடிமைகளாக்கும்,” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த 2023ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு இதேபோல், தனியார் துறை ஊழியர்கள் பணி நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தி சட்டமன்றத்தில், சட்டத்திருத்தம் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதற்கு ஆளும் கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் பல்வேறு தொழிலாளர்கள் அமைப்பினரும் கடும் விமர்சனத்தையும் கண்டனத்தையும் முன்வைத்ததால் தொடர்ந்து அது திரும்பப் பெறப்பட்டது.
June 07, 2025 4:04 PM IST


