Last Updated:
பெங்களூருவில் கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்ததற்குப் பொறுப்பேற்று கர்நாடக கிரிக்கெட் சங்கச் செயலாளர் சங்கர் மற்றும் பொருளாளர் ஜெயராம் பதவி விலகினர்.
பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததற்குப் பொறுப்பேற்று கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கச் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் பதவி விலகியுள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 18 ஆண்டுகளுக்குப் பின் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் பெற்ற நிலையில், பெங்களூருவில் கடந்த புதன்கிழமை நடந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் பல லட்சம் ரசிகர்கள் திரண்டபோது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக ஆர்சிபி அணி நிர்வாகிகள், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான டி.என்.ஏ. நிறுவன அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்ததற்குப் பொறுப்பேற்று கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கச் செயலாளர் சங்கர் மற்றும் பொருளாளர் ஜெயராம் ஆகியோர் பதவி விலகியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் இருவரும் மாநில கிரிக்கெட் சங்கத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
அதில், கூட்ட நெரிசல் சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக எதிர்பாராத நிகழ்வுகள் நடந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர். தங்களின் பங்கு மிகக் குறைவாக இருந்தாலும், தார்மீகப் பொறுப்பேற்று தங்களது பதவியில் இருந்து விலகுவதாகக் கூறியுள்ளனர்.
இதனிடையே, ஆர்சிபி அணியின் சீனியர் வீரரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் வெங்கடேஷ் என்பவர் கப்பன் பார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கின் கீழ் இந்தப் புகாரையும் சேர்த்து விசாரிப்பதாகக் காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர். இதனால் விராட் கோலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளதா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
Bangalore,Karnataka
June 07, 2025 11:53 AM IST


