Last Updated:
உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 3ஆம் தேதி நீட் முதுநிலைத் தேர்வை நடத்த அனுமதி வழங்கி, பிறகு கால அவகாசம் வழங்க முடியாது எனத் தெரிவித்தது.
முதுநிலை நீட் தேர்வை ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடத்த அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றம், அதன் பிறகு கால அவகாசம் வழங்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தது.
வரும் 15ஆம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 3ஆம் தேதி தேர்வை நடத்த அனுமதி கோரி, உச்ச நீதிமன்றத்தில் தேசியத் தேர்வுகள் வாரியம் மனுத் தாக்கல் செய்தது. இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சுமார் இரண்டு லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் தேர்வை எழுதுகின்றனர் என்றும், ஒரே ஷிஃப்டில் நடத்தினால் தற்போது உள்ள தேர்வு மையங்களை விடக் கூடுதலாக 450 மையங்கள் தேவைப்படும் என்பதால் ஆகஸ்ட் 3-இல் தேர்வு நடத்த அனுமதிக்க வேண்டும் எனத் தேசியத் தேர்வுகள் வாரியம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது, தேர்வு வாரியம் கேட்கும் கால அவகாசம் அதிகமாக இருப்பதாகத் தெரிவித்த நீதிபதிகள், மையங்களைக் கண்டறிய ஏன் இவ்வளவு அவகாசம் தேவைப்படுகிறது எனக் கேள்வி எழுப்பினர். பாதுகாப்புக் காரணங்களுக்காகத்தான் கூடுதல் அவகாசம் கோருவதாகத் தேசியத் தேர்வுகள் வாரியம் தெரிவித்தது.
மேலும், மாணவர்களின் நலனுக்காகப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி உள்ளதாகக் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நட்ராஜ் கூறினார். இதனைத் தேர்வு நடத்தும் டிசிஎஸ் நிறுவனமும் உறுதி செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதனை ஏற்ற நீதிபதிகள், ஆகஸ்ட் 3ஆம் தேதி தேர்வு நடத்த அனுமதி அளித்தனர். மேலும், தேர்வை மீண்டும் ரத்து செய்யவோ, ஒத்திவைக்கவோ கூடாது என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
June 06, 2025 9:53 PM IST


