Last Updated:
காசாவில் இஸ்ரேல் தாக்குதலால் உணவுப் பஞ்சம் மோசமடைந்துள்ளது. பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ. 2342க்கு விற்கப்படுகிறது.
காசா மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல் ஒரு பக்கம் ஏராளமானோர் கொல்லப்பட்டுவரும் வேளையில், மறுபக்கம் காசாவில் உணவுப் பஞ்சம் காரணமாக பலரின் உயிரும் கேள்விக்குறியாகியுள்ளது.
2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7- ஆம் தேதி முதல் காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் அங்கு போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், இஸ்ரேல் – காசா இடையேயான முதல் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த மார்ச் 1ஆம் தேதி முடிவுக்கு வந்த நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தக் காலத்தை ஏப்ரல் மாதம் வரை நீட்டிக்கலாம் என்று அமெரிக்கா யோசனை தெரிவித்தது.
இதனை நிராகரித்துவிட்ட ஹமாஸ் அமைப்பு தங்கள் வசம் உள்ள பிணைக் கைதிகளை விடுவிக்கவும் மறுத்துவிட்டது. அதைத் தொடர்ந்து காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது. கடந்த மார்ச் 19ஆம் தேதி காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 436 பேர் கொல்லப்பட்டனர்.
இதன்பின்னரும் அங்கு தொடர்ந்து தாக்குதல் நடந்துவருகிறது. மேலும், காசாவில் இஸ்ரேல் தரைவழித் தாக்குதலையும் நடத்திவருகிறது. மறுபக்கம் காசாவில் உள்ள மக்களுக்கு தற்போது அடிப்படை மருந்துகளும், உணவும் அதிக அளவில் தேவைப்படுகிறது. சில நாள்களுக்கு முன்பு, ஐ.நா. அனுப்பிய உணவுப் பொருள்கள் ஏற்றிச் சென்ற லாரிகள் பல நாள்களாக காசா எல்லையிலேயே நிறுத்திவைக்கப்பட்டிருந்த செய்திகளும் வெளியானது.
அதன்பிறகு அங்கு ஒரு தாய் தனது குழந்தைகளுக்காக குப்பையில் உணவு தேடும் படங்கள் வெளியாகி உலகத்தையே உலுக்கியது. இவ்வளவு கடுமையான உணவுப் பஞ்சம் நிலவிவரும் காசாவில் அடுத்து ஒரு அதிர்ச்சிகரமான செய்தி வந்திருக்கிறது.
இந்தியாவில் ரூ. 5க்கு விற்கப்படும் ஒரு பாக்கெட் பார்லே-ஜி பிஸ்கட் காசாவில் ரூ. 2342 என விற்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக போரில் சிக்கித் தவிக்கும் காசாவில் கடுமையான உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடுவதற்கு இது மேலும் ஒரு சான்றாகப் பதிந்துள்ளது.
June 06, 2025 7:52 PM IST


