இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஜூன் 2 (நாளை) நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளவிருக்கிறது.
ஆனால் நேற்று நடைபெற்ற குவாலிஃபையர் 2 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டபோது, போட்டியில் மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகு தொடங்கப்பட்டது. ஆனால் மழை நின்றபிறகு, எந்த விதத் தடையுமின்றி, போட்டி முழுமையாக முடிவடைந்தது.
இந்த குவாலிஃபையர் 2 போட்டி மழையால் நிறுத்தப்பட்டிருந்தால், புள்ளிப்பட்டியலின் அடிப்படையில், பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கும் எனக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பெங்களூரு – பஞ்சாப் அணிகள் மோதும் இறுதிப்போட்டியிலும் மழையால் குறுக்கிட்டால் என்ன ஆகும் என்று கேள்வி எழுந்துள்ளது. ஐபிஎல் விதிகளின்படி இறுதிப்போட்டிக்கு ‘ரிசர்வ் டே’ உள்ளது.
நாளை (ஜூன் 3) நடைபெறும் இறுதிப்போட்டிக்கு முன்னர் மழை குறுக்கிட்டால், 120 நிமிடங்கள் வரை ஆட்டம் தள்ளிவைக்கப்படும் (குவாலிஃபையர் 2 போட்டி 2 மணி நேரம் தாமதமானது குறிப்பிடத்தக்கது). இதையடுத்து மேலும் மழை தொடர்ந்தால், இறுதிப்போட்டியின் ஓவர்கள் குறைக்கப்படும். பிறகு டிஎல்எஸ் (DLS) முறைப்படி, இறுதிப்போட்டி நடைபெறும். இறுதிப்போட்டி 5 ஓவர்கள் வரை சுருக்கப்படலாம். அதுவரையும் போட்டி நடைபெறவில்லை என்றால், இறுதிப்போட்டி அடுத்த நாளுக்கு (ரிசர்வ் டே) தள்ளி வைக்கப்படும்.
ரிசர்வ் டே-விலும் இதே நடைமுறைதான் பின்பற்றப்படும். அதேபோல முதலில் மழை நிற்கும் வரை (2 மணி நேரம்) போட்டி தள்ளிவைக்கப்படும். இதையடுத்தும் மழை தொடர்ந்தால், ஓவர்கள் குறைக்கப்பட்டு, டிஎல்எஸ் முறை அமலாகும். 5 ஓவர்கள் வரை போட்டி சுருக்கப்படலாம். அப்படியும் மழை குறுக்கிடும்பட்சத்தில் சூப்பர் ஓவர் நடத்தப்படும். சூப்பர் ஓவர் டிராவானால், மீண்டும் சூப்பர் ஓவர் நடத்தப்படும்.
ஒருவேளை மழை பாதிப்பால், சூப்பர் ஓவர் கூட நடத்த முடியாத நிலை வந்தால், புள்ளிப்பட்டியலில் முதலில் உள்ள அணிக்கு ஐபிஎல் கோப்பை வழங்கப்படும். அப்படியென்றால், தற்போது நெட் ரன் ரேட் அடிப்படையில் முதலில் உள்ள பஞ்சாப் கிங்ஸ் அணிக்குக் கோப்பை வழங்கப்படும்.
Ahmedabad,Gujarat
June 02, 2025 2:50 PM IST

