Last Updated:
PM கிசான் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை மொத்தம் 19 தவணை நிதி வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த பிப்ரவரி மாதத்தில் 19ஆம் தவணையை வெளியிட்டார்.
நாடு முழுவதும் உள்ள நலிவுற்ற விவசாயிகளுக்கான வருமான ஆதரவுத் திட்டமாக மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்டம் உள்ளது. நாட்டில் விவசாய உற்பத்தித் திறனை அதிகரிக்க மற்றும் விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்த மத்திய அரசு மேற்கொண்ட முக்கிய முயற்சிகளில் இந்த திட்டமும் ஒன்றாகும்.
இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் ரூ.6,000 நிதி உதவியை வழங்கி வருகிறது. இந்த நிதி மூன்று சம தவணைகளில் ரூ.2,000 வீதம் நேரடி பலன் பரிமாற்றம் (DBT) மூலம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.
PM கிசான் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை மொத்தம் 19 தவணை நிதி வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த பிப்ரவரி மாதத்தில் 19ஆம் தவணையை வெளியிட்டார். இதன் மூலம் 2.4 கோடி பெண்கள் உட்பட 9.8 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்தனர். இதற்கு முன் 18-ஆம் தவணை நிதி கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளியிடப்பட்டது மற்றும் 17-ஆம் தவணை 2024 ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்டது.
2019-ஆம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டில் அப்போதைய நிதியமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்த பிறகு, பிரதமரின் கிசான் திட்டம் உலகின் மிகப்பெரிய நேரடி மானியத் திட்டமாக மாறியுள்ளது. இதன் கீழ், தகுதியுள்ள விவசாயிகள் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் ஏப்ரல்-ஜூலை, ஆகஸ்ட்-நவம்பர் மற்றும் டிசம்பர்-மார்ச் மாதங்களுக்குள் மொத்தம் ரூ.6,000 ஆண்டுதோறும் பெறுகிறார்கள்.
20-வது தவணை எப்போது வெளியிடப்படும்?
19-ஆம் தவணை நிதி பிப்ரவரி 2025-ல் வழங்கப்பட்டதால், இருபதாம் தவணை நிதி ஜூன் 2025-ல் அதாவது இந்த மாத இறுதிக்குள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி இந்தத் தொகையை வெளியிடுவார் என்றாலும் நிகழ்வின் சரியான தேதி மற்றும் இடம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையில், PM கிசான் திட்டத்தின் அடுத்த தவணை நிதியைப் பெற விவசாயிகள் தங்கள் e-KYCஐ பூர்த்தி செய்யவும், தகுதியை சரிபார்க்கவும், பயனாளி நிலையை சரிபார்க்கவும், இன்னும் விண்ணப்பிக்கவில்லை என்றால், பதிவு செய்யுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பிஎம் கிசான் திட்டத்திற்கு விண்ணப்பிக்க யார் தகுதியானவர்கள்?
பிரதமர் கிசானின் 20-ஆம் தவணைக்கு தகுதி பெற ஒருவர்:
- இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
- விளைச்சலுக்கு ஏற்ற நிலம் வைத்திருக்க வேண்டும்.
- சிறு அல்லது குறு விவசாயியாக இருக்க வேண்டும்.
- மாதத்திற்கு ரூ.10,000 அல்லது அதற்கு மேல் பெறும் ஓய்வூதியதாரராக இருக்கக்கூடாது.
- வருமான வரித்தாக்கல் செய்பவராக இருக்கக்கூடாது.
- நிறுவன நில உரிமையாளராக இருக்கக்கூடாது.
பிஎம் கிசான் e-KYC கட்டாயம்:
- இந்த திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி, “PMKISAN”-ல் பதிவு செய்யப்பட்ட விவசாயிகள் eKYC செயல்முறையை முடிப்பது கட்டாயமாகும்.
- பிஎம் கிசான் போர்ட்டலில் OTP அடிப்படையிலான eKYC அல்லது அருகிலுள்ள பொது சேவை மையத்தில் (CSC) பயோமெட்ரிக் அடிப்படையிலான eKYC மூலம் விவசாயிகள் தங்களின் e-KYC செயல்முறையை முடிக்கலாம்.
பயனாளியின் நிலையை (Beneficiary Status) எவ்வாறு சரிபார்க்கலாம்?
- https://pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- ‘Know Your Status’ விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் பதிவு செய்யப்பட்ட எண், கேப்ட்சாவை உள்ளிட்டு ‘Get Data’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- இறுதியாக பயனாளியின் நிலை திரையில் காட்டப்படும்.
பயனாளி பட்டியலில் (Beneficiary List) பெயரை எவ்வாறு சரிபார்ப்பது?
- அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- ‘Beneficiary List’ விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
- பிறகு ‘Get Report’-ஐ கிளிக் செய்யவும்.
- இறுதியாக பயனாளிகளின் முழுமையான பட்டியலை நீங்கள் காண்பீர்கள்.
திட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
- https://pmkisan.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
- ‘New Farmer Registration’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் ஆதார் எண் மற்றும் கேப்ட்சாவை உள்ளிடவும்.
- விவரங்களை நிரப்பி, ‘ஆம்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- படிவத்தை பூர்த்தி செய்து, அதை சமர்ப்பித்து, பிரிண்ட்அவுட் எடுக்கவும்.
- ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் நீங்கள் PM-KISAN உதவி எண்களான 155261 மற்றும் 011-24300606ஐ அழைக்கலாம்.
June 05, 2025 4:56 PM IST


