Last Updated:
முன்பு 2021 ஆம் ஆண்டு நடந்த ஏலத்தின்போது பெங்களூர் அணியால் 15 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டிருந்தார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி பஞ்சாப் அணியைச் சேர்ந்த நியூசிலாந்து நாட்டு வீரர் கைல் ஜேமிசன் கவனம் பெற்றுள்ளார். அவர் கைப்பற்றிய பிலிப்ஸ் சால்ட் மற்றும் கேப்டன் ரஜத் பட்டிதார் விக்கெட்டுகள் மூலம் ஆர்.சி.பி அணி தடுமாறியது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பௌலிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து ஆர்.சி.பி அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர். அந்த அணியின் பிலிப்ஸ் சால்ட் 9 பந்துகளில் 16 ரன்கள் எடுத்திருந்தபோது ஜேமிசன் வீசிய பந்தில் ஸ்ரேயாஸ் ஐயரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதேபோன்று ஆர்.சி.பி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் 16 பந்துகளில் 26 ரன்கள் எடுத்திருந்தபோது ஜேமிசன் வீசிய பந்தில் எல்.பி.டபிள்யூ. என்ற முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இந்த இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம் ஆர்.சி.பி அணியின் ரன் குவிப்பு வேகம் அதிரடியாகக் குறைந்தது. அதைத் தொடர்ந்து 25 ரன்கள் எடுத்திருந்த லிவிங்ஸ்டோனையும் ஜேமிசன் வெளியேற்றினார். இதையடுத்து கைல் ஜேமிசன் யார் என்பது குறித்து இணையத்தில் ரசிகர்கள் தேட ஆரம்பித்துள்ளனர்.
இவர் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த வீரர். 30 வயதாகும் ஜெமிசன் நியூசிலாந்து அணிக்காக 19 டெஸ்ட், 17 ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் 15 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். முன்பு 2021 ஆம் ஆண்டு நடந்த ஏலத்தின்போது பெங்களூர் அணியால் 15 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டிருந்தார்.
அந்த சீசனில் ஒன்பது போட்டிகள் விளையாடி 9 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். இந்த நிலையில் இன்று 2025 ஐபிஎல் இறுதிப் போட்டியில் முக்கியமான தாக்கத்தை ஜேமிசன் ஏற்படுத்தியுள்ளார்.
அதேநேரம் 3 ஓவர்கள் வீசி 25 ரன்கள் கொடுத்திருந்த ஜேமிசன் தனது கடைசி ஓவரில் 3 சிக்சர் உள்பட 23 ரன்களை அள்ளிக் கொடுத்தது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
June 03, 2025 9:09 PM IST


