Last Updated:
பெங்களூருவில் ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 14 வயது சிறுமி உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.
பெங்களூருவில் ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சிறுமி உள்பட 11 பேர் உயிரிழந்தது நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் 18 ஆண்டு கால காத்திருப்புக்குப் பின் கோப்பையை வென்று மகுடம் சூடியது ஆர்சிபி அணி. இதனைக் கொண்டாடும் விதமாக, பெங்களூருவில், ஆர்சிபி அணிக்கு வெற்றிப் பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. வீரர்களைக் காணும் ஆவலில் ரசிகர்கள் பலர் மரங்களின் மீதும், உயர்நீதிமன்ற வளாகக் கட்டடங்கள் மீதும் ஏறினர்.
இதனால் பெங்களூருவில் அசாதாரண சூழல் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதிக மக்கள் கூடியதால், ரசிகர்கள் மைதானத்திற்குள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். ஆர்சிபி வீரர்களின் வெற்றிப் பேரணி இதனால் ரத்து செய்யப்பட்டது.
இந்தக் கலவரத்தில் 14 வயது சிறுமி உட்பட 11 பேர் உயிரிழந்தனர். எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த சோக சம்பவத்துக்கு மத்தியில், மைதானத்திற்கு வந்த வீரர்களுக்குச் சிறிய அளவில் பாராட்டு விழா நடைபெற்றது.
பின்னர் இந்தச் சம்பவம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் சித்தராமையா, கூட்ட நெரிசல் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதற்கிடையில், இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஒருவரின் தந்தை, அவரின் மகனை உடற்கூறாய்வு செய்யாமல் உடலை ஒப்படைக்குமாறு அழுதுகொண்டே கோரிக்கை வைத்தார்.
இதுகுறித்து அவர், தனக்கு ஒரு மகனே இருப்பதாகவும், தன்னிடம் கூறாமல் இந்த வெற்றிக் கொண்டாட்டத்திற்கு வந்ததாகவும், அவரை கத்தியால் வெட்டித் தன்னிடம் ஒப்படைக்க வேண்டாம் என்று அதிகாரிகளிடமும், செய்தியாளர்களிடமும் தெரிவித்துள்ளார்.
Bangalore,Karnataka
June 05, 2025 10:29 AM IST


