Last Updated:
கடந்த வாரம் 20 ரூபாய் 30 ரூபாய் விற்பனையான பீன்ஸ் தற்பொழுது 100 முதல் 150 வரை விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் அதிகளவு விவசாயம் செய்யும் முக்கிய மாவட்டமாக நீலகிரி விளங்குகிறது. இங்கு பலவகை மலைக் காய்கறிகள் விளைவிக்கப்பட்டு, உள்ளூர் சந்தைகள் முதல் உலகளாவிய சந்தைகள் வரையிலும் விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
அந்த வகையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து பொழிந்து வந்த கனமழையின் காரணமாக, விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து, விவசாயப் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், பெரும்பாலான விளைபொருள்கள் விவசாய நிலங்களிலேயே வீணாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
தொடர் மழையின் காரணமாக, மலைக் காய்கறிகளின் விலை அதிகரிக்கத் துவங்கியுள்ளது. அதிலும், பீன்ஸ் விலை நேற்று வரை ரூபாய் 30-க்கு விற்பனையான நிலையில், இன்று திடீரென பீன்ஸ் மார்க்கெட் ரூபாய் 150-ஐ எட்டியுள்ளது. இதனால், மலை மாவட்டத்தில் பீன்ஸ் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும், தொடர் மழையின் காரணமாகச் செடியிலேயே அதிகளவு பாதிக்கப்பட்டதால், சற்று கவலையும் தெரிவிக்கின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் இருந்து பீன்ஸ் கேரளா, கர்நாடகா, சென்னை மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வரத்து குறைவாக உள்ளதால், உள்ளூர் மார்க்கெட் மட்டுமின்றி, வெளிச் சந்தைகளிலும் மலைக் காய்கறிப் பொருட்களுக்கும் தற்போது டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து வியாபாரி பாபு கூறுகையில், “கடந்த வாரம் 20 ரூபாய், 30 ரூபாய் விற்பனையான பீன்ஸ் தற்பொழுது 100 முதல் 150 வரை விற்பனையாகிறது. தொடர் மழையின் காரணமாக, விவசாயப் பொருட்கள் வரத்து குறைந்துள்ளது. சென்னை, கோயம்புத்தூர், பெங்களூர், கேரளா போன்ற இடங்களுக்கு முன்பெல்லாம் 10 முதல் 15 டன் காய்கறிகள் செல்லும்.
தற்பொழுது, காய்கறி வரத்து குறைவாக உள்ளதால், ஒன்று, இரண்டு டன் மட்டுமே அனுப்ப முடிகிறது. முன்கூட்டியே பருவமழை அதிகமாகப் பொழிந்ததால், காய்கறிப் பொருள்கள் சேதம் அடைந்து, விலை உயர்ந்துள்ளது” எனத் தெரிவித்தார்.
The Nilgiris,Tamil Nadu
June 04, 2025 6:01 PM IST

