Last Updated:
இலங்கையில் சுகிர்தரன் தனது மனைவி சுவர்ணலதாவின் தலையை வெட்டி, தலையுடன் காவல்நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் மனைவியின் தலையை வெட்டி துண்டாக்கிய கணவன் தலையுடன் காவல்நிலையத்தில் சரணடைந்த சம்பவம் கதிகலங்க வைத்துள்ளது.
இலங்கை வவுனியா மாவட்டத்தில் உள்ள புலியகுளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுகிர்தரன் – சுவர்ணலதா தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி சுவர்ணலதா 3 மாத கர்ப்பமாக இருந்தார். புலியகுளம் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் அவர் ஆசிரியையாக பணியாற்றி வந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடால் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.
மேலும் மனைவியின் நடத்தையிலும் சுகிர்தரன் சந்தேகம் அடைந்ததாகத் தெரிகிறது. விடிந்ததும் குடும்ப சண்டையுடன் தொடங்கி, இரவு உறங்கும்போதும் சண்டையுடன் முடிந்து வந்ததால் ஆசிரியை சுவர்ணலதா கடும் மன விரக்தியில் இருந்தார். ஆனால் அதை புரிந்து கொள்ளாத கணவர் சுகிர்தரன், மனைவி வேறு யாருடனோ பேசி கொண்டிருப்பதாகச் சந்தேகம் அடைந்துள்ளார். அது தொடர்பாக சண்டையிட்டு மனைவியை அடித்து சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காவல்நிலையம் வரை சென்றது. இதையடுத்து போலீசார் சண்டை போடக்கூடாது என இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். ஆனால் வரும் வழியில் சுகிர்தரன் ஆக்ரோஷச் செயலில் ஈடுபட்டுள்ளார். மனைவி மீது தீரா பகையுடன் இருந்தவர் அரிவாளால் அவரது தலையை வெட்டி எடுத்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார். ரத்த வெள்ளத்தில் உடலை வீசியவர் தலையை மட்டும் கவரில் போட்டு கொண்டு மீண்டும் காவல்நிலையம் எடுத்துச் சென்றார்.
இதனைத்தொடர்ந்து மனைவியை கொன்று உடலை காட்டுப்பகுதியில் வீசியுள்ளேன் என வாக்குமூலம் அளித்து போலீசில் சரணடைந்துள்ளார். இதனைக்கண்டு மிரண்டுபோன போலீசார் சுகிர்தரனை கைது செய்து அவரது மனைவியின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். மனைவியை வெட்டி கொன்ற கணவன் தலையை துண்டித்து எடுத்து காவல்நிலையத்தில் சரணடைந்த சம்பவம் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
June 04, 2025 3:43 PM IST
மனைவியின் தலையை வெட்டி துண்டாக்கி கொடூர கொலை… போலீசில் கணவன் சொன்ன அதிர்ச்சி காரணம்..!


