Last Updated:
ஆர்சிபி மற்றும் பஞ்சாப் அணிகளுக்காக விளையாடியுள்ள க்ரிஸ் கெய்ல் இரு அணிகளுக்கும் தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் மற்றும் ஆர்சிபி அணிகள் இன்று இறுதிப் போட்டியில் மோதுகின்றன. குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்தப் போட்டி இரவு 7.30 மணிக்குத் தொடங்க உள்ளது.
இரு அணிகளும் இதுவரை கோப்பையை வெல்லாததால் இந்தப் போட்டி மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக விராட் கோலி ஐபிஎல் தொடரில் ஆர்சிபி என்கிற ஒரே அணிக்காக இதுவரை விளையாடி வருகிறார். சர்வதேச அளவில் பல்வேறு சாதனைகளை அவர் நிகழ்த்தி இருந்தாலும், அவர் இடம்பெற்றுள்ள ஆர்சிபி அணி ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை.
இது அவரது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி வருகிறது. மேலும் ஆர்சிபி அணியை மற்ற அணியின் ரசிகர்கள் கோப்பை வெல்லாதது குறித்து பலமுறை கேலி கிண்டல் செய்துள்ளார்கள். இந்நிலையில் இன்றைக்கு அந்த அணி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.
இந்நிலையில் பிரபலங்கள் பலரும் ஆர்சிபி அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். பிரிட்டனின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் ஆர்சிபி அணிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் பெங்களூரு பெண்ணைத் திருமணம் செய்து இருக்கிறேன். எனவே ஆர்சிபி எனது அணி” என்று கூறியுள்ளார்.
மேலும் இந்தியத் திரை உலகின் முன்னணி நடிகரான அமீர்கான் தனது ஆதரவை ஆர்சிபி அணிக்கு வழங்கி உள்ளார். ஆர்சிபி மற்றும் பஞ்சாப் அணிகளுக்காக விளையாடியுள்ள க்ரிஸ் கெய்ல் இரு அணிகளுக்கும் தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தலையில் பஞ்சாபின் பாரம்பரிய டர்பன் தலைப்பாகை அணிந்து ஆர்சிபி ஜெர்சியையும் அணிந்துள்ளார். பிரபலங்கள் பலரும் ஆர்சிபி அணிக்கு ஆதரவு தெரிவித்தாலும் இன்றைய போட்டியில் கோப்பையை வெல்லுமா என்ற கேள்வியும் காணப்படுகிறது.
ஏனென்றால் எதிர்நிலையில் போட்டியிடும் ஸ்ரேயாஸ் ஐயரின் பஞ்சாப் கிங்ஸ் அணியும் வலுவானதாக உள்ளது. இதனால் இன்றைய ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
June 03, 2025 7:00 PM IST


