Last Updated:
2024-25 கல்வியாண்டில் வயது வந்தோர் கல்வித் திட்டத்தில் 100% தேர்ச்சியுடன் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
2024-25ஆம் கல்வியாண்டில் வயது வந்தோர் கல்வித் திட்டத்தில் 100 விழுக்காடு தேர்ச்சியுடன் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத, படிக்கத் தெரியாதவர்கள் அனைவரும் எழுத்தறிவு பெறும் நோக்கில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுடன் இணைந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் இப்பணி நடைபெற்று வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இணைந்து கல்வி பயின்றனர். அவர்களுக்குப் படிக்க எழுதக் கற்றுத்தரப்பட்டுத் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்மூலம் வயது வந்தோர் கல்வித் திட்டத்தில் 100 விழுக்காடு தேர்ச்சியுடன் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. டெல்லியில் 7 ஆயிரத்து 959 பேர் தேர்வெழுதிய நிலையில், 7 ஆயிரத்து 901 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் ஒரு கோடியே 77 லட்சம் பேர் இந்தத் தேர்வில் பங்கேற்றுள்ளனர். ஆனால், அதில், 34 லட்சத்து 31 ஆயிரம் பேர் மட்டும் எழுத்தறிவு பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் வயது வந்தோர் கல்வித் திட்டத்திற்கான தேர்வில் ஆண்களை விடப் பெண்களே அதிகளவில் பங்கேற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
June 03, 2025 12:10 PM IST


