விதையில் இருந்து சந்தை வரை என்கிற மத்திய அரசின் அணுகுமுறை மூலம் கடந்த 11 ஆண்டுகளில் இந்திய வேளாண் துறை புது உத்வேகம் பெற்றுள்ளது. 2013-14 நிதி ஆண்டில் 265 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்த உணவு தானிய உற்பத்தி 2024-25 நிதி ஆண்டில் 347 மில்லியன் மெட்ரிக் டன்னுக்கும் மேல் உயர்வை கண்டுள்ளது.
இதே போன்று, 2014-15 ஆம் நிதியாண்டில் 146 மில்லியன் டன்னாக இருந்த பால் உற்பத்தி, கடந்த பத்து ஆண்டுகளில் 239 மில்லியன் டன்னாக, ஏறத்தாழ 63.56 சதவீதம் வரை வளர்ச்சி கண்டுள்ளது.
இதன் மூலம் பால் உற்பத்தியில் இந்தியா, உலக அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. அதேபோல், முட்டை மற்றும் மீன் உற்பத்தியில் சர்வதேச அளவில் இரண்டாவது இடத்தையும், இறைச்சி உற்பத்தியில் 5வது இடத்திலும் இந்தியா உள்ளது.
2013-14 ஆண்டை விட 2024-25 ஆம் ஆண்டில் விவசாயத்திற்கு ஒதுக்கப்படும் நிதி ஐந்து மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த 2013 – 14ஆம் நிதி ஆண்டில் ரூ.27,663 கோடியாக இருந்த வேளாண் பட்ஜெட் நடப்பு நிதி ஆண்டில் 5 மடங்கு அதிகரித்து, 1 லட்சத்து 37 ஆயிரத்து 664 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவை மட்டுமின்றி, வேளாண் கடன் திட்டத்தின் கீழ் கடன் உச்ச வரம்பு 2025-26 ஆம் ஆண்டில் 3 லட்சத்தில் இருந்து 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ள்து. பிரதமர் ஃபசல் பீமா திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் காப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. வேளாண்மையை அதிகரிப்பதற்கான பிரதமரின், தன் தானிய கிருஷி திட்டத்தின் மூலம் 100 மாவட்டங்களில் 1 கோடியே 70 லட்சம் விவசாயிகள் பயன் பெறுகின்றனர்.
பாசன வசதியை விரிவுப்படுத்துவதற்கான பிரதமரின் கிருஷி சிஞ்சாய் திட்டத்திற்கு, 2021-26 வரை, ஆண்டிற்கு 93 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர பிஎம் கிஷான் திட்டத்தின் மூலம் 11 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வருவாய் ஈட்டுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பருவமழை தவறுதல் உள்ளிட்ட இடர்களை சமாளிக்க பிஎம் கிஷான் திட்டத்தின் கீழ் 2021 முதல் 2026 வரை, ஆண்டிற்கு 93 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் 112 நீர் பாசனத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.நாட்டில் மெகா உணவு பூங்காக்களின் எண்ணிக்கை 2014 ஆம் ஆண்டு 2 என்ற அளவில் இருந்த நிலையில் 2023ஆம் ஆண்டு 24 ஆக உயர்ந்துள்ளது.
வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் சூழலை உருவாக்கியதன் மூலம் 2019 முதல் தற்போது வரை 1943 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நிதி உதவியுடன் தொடங்கப்பட்டுள்ளன.
2013 -14 நிதி ஆண்டில் கோதுமைக்கு, குவிண்டாலுக்கு 1400 ரூபாயாக வழங்கப்பட்டு வந்த குறைந்தபட்ச ஆதார விலை, 2024 -25 நிதி ஆண்டில் குவிண்டாலுக்கு ரூ.2425 ரூபாயாக வழங்கப்படுகிறது. கரும்பு சக்கையில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனால் கொள்முதல் 2013 – 14 ஆண்டில் 38 கோடி லிட்டராக இருந்த நிலையில் 2023 – 24 நிதி ஆண்டில் 707 கோடியாக அதிகரித்துள்ளது. நாட்டில் தேன் உற்பத்தியும் கடந்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
June 03, 2025 9:36 AM IST

