Last Updated:
கோவில்பட்டியில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில் புதுதில்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி முதல் பரிசைத் தட்டிச் சென்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகர் செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் கடந்த மாதம் 23ஆம் தேதி முதல் 14வது அகில இந்திய அளவிலான ஹாக்கி போட்டிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் இந்தியா முழுவதிலிருந்தும் புகழ்பெற்ற 16 அணிகள் கலந்து கொண்டன.
லீக், காலிறுதி, அரையிறுதி போட்டிகள் நடைபெற்ற நிலையில் இறுதிப்போட்டிக்கு நியூ டெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணியும், புவனேஸ்வர் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணியும் தகுதி பெற்றன. இறுதி போட்டியில் நியூ டெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணியும், புவனேஸ்வர் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணியும் மோதிய நிலையில் 3-க்கு 2 என்ற கோல் கணக்கில் நியூ டெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
நியூ டெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணிக்கு கோவில்பட்டியைச் சேர்ந்த இந்திய ஹாக்கி அணி வீரர் மாரீஸ்வரன் தலைமை வகித்தும், தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு இந்திய ஹாக்கி அணி வீரர் கார்த்தி விளையாடியது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நடைபெற்ற 3ஆம் மற்றும் 4ஆம் பரிசுக்கான போட்டியில் நியூ டெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும், செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணியும் மோதியதில் 4-க்கு 2 என்ற கோல் கணக்கில் நியூ டெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி, செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணியை வீழ்த்தி 3ஆம் இடத்தைப் பிடித்தது.
முன்னாள் இந்திய ஹாக்கி வீரரும், அர்ஜுனா விருது பெற்றவருமான எம்.முகமது ரியாஸ், கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம் ஆகியோர் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
முதல் பரிசு ரொக்கப்பணம் ரூ.2 லட்சம், லட்சுமி அம்மாள் நினைவு கோப்பையை புதுதில்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணியும், 2 ஆம் பரிசு ரூ.1 லட்சம் மற்றும் கோப்பையை புவனேஸ்வர் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணியும், 3ஆம் பரிசு ரூ.50 ஆயிரம் மற்றும் கோப்பையை புது தில்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும், 4ஆம் பரிசாக கோப்பையை செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணியும் பெற்றன.
இந்த ஹாக்கி தொடரின் தொடர் நாயகனாக நியூ டெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணிக்காக விளையாடிய இந்திய ஹாக்கி அணி வீரர் கார்த்தி பெற்றார். தொடரின் சிறந்த நடுநிலை வீரர் விருதினை இந்திய ஹாக்கி அணி மாரீஸ்வரன் பெற்றார். நியூஸ் 18 செய்திகளுக்காக கோவில்பட்டி செய்தியாளர் மகேஸ்வரன்.
Thoothukkudi,Tamil Nadu
June 02, 2025 9:04 PM IST

