SINGAPORE: சிங்கப்பூரில் குழு ஒன்று பலமாக மேசையில் அடித்து ஒலி எழுப்பியும் பாடல் பாடியும் குடியிருப்பாளர்களை தொந்தரவு செய்து வருவதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, கிட்டத்தட்ட ஒவ்வொரு வார இறுதியிலும் இவ்வாறு நடப்பதாக அவென்யூ 3 இல் உள்ள HDB பிளாக்கில் வசிக்கும் அங் மோ கியோ குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர்.
சமீபத்தில், அந்தக் குழுவில் உள்ள சில ஆடவர்கள் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதை குடியிருப்பாளர்களில் ஒருவர் கண்டறிந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவெளியில் அசுத்தம்
கடந்த மே 30ஆம் தேதி அதிகாலை 5 மணிவாக்கில், அருகிலுள்ள புல்வெளியில் இரண்டு ஆண்கள் சிறுநீர் கழிப்பது போல் இருக்கும் காணொளி காட்சிகளை அவர் பதிவு செய்தார்.
பெரும்பாலும் அந்த குழுவில் ஏழு முதல் எட்டு ஆடவர்கள் இருப்பார்கள் என்றும், எப்போதாவது பெண் ஒருவர் காணப்படுவார் என்றும் குடியிருப்பாளர் கூறினார்.
அவர்கள் பெரும்பாலும் அந்த இடத்தில் ஒன்று கூடி மேசையில் அடித்து ஒலி எழுப்பி பாடல் பாடுவது போன்ற தனித்துவமான சத்தத்தை உருவாக்குவதாகவும் கூறப்படுகிறது.

அதே போன்று, அண்டை வீட்டார் சிலர் இதே குழுவைப் பற்றி தனது புகார் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
போலீசுக்கு தகவல்
கடந்த வார இறுதியில் ஒரு முறையும் கடந்த மே 30ம் தேதி அன்றும் இந்த தொந்தரவுகள் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததாக குடியிருப்பாளர் கூறினார்.
சட்டம் மற்றும் தண்டனை
இதுபோன்று பொது இடங்களில் சிறுநீர் கழித்தல் அல்லது மலம் கழித்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டால் S$1,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

