Last Updated:
டெல்லி மதராசி முகாமில் வீடுகளை இழந்த 400 தமிழ் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு உதவிகள் வழங்கப்படும் என்றும் சொந்த மாவட்டங்களுக்கு திரும்ப உதவப்படும் என்றும் அறிவித்துள்ளது.
டெல்லி ஜங்புராவில் ‘மதராசி கேம்ப்’ பகுதியில் நான்கு தலைமுறைகளாக சுமார் 400 தமிழ் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் பாராபுல்லா கால்வாய் சீரமைப்புப் பணிகளுக்காக ஆக்கிரமிப்புப் பகுதிகளை அகற்ற வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஜூன் ஒன்றாம் தேதி மாலைக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கெடு விதிக்கப்பட்டிருந்தது.
நீதிமன்ற உத்தரவுப்படி மதராசி முகாமில் உள்ள வீடுகளை இடிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது. 10க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள் மூலம் வீடுகளை இடிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டது. வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களைக் காவல்துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று அப்புறப்படுத்தினர்.
வீடு, உடமைகளை இழந்த மக்கள் கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர். தற்போது வசிக்கும் பகுதியில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மாற்று இடத்தில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை என்றும் தமிழர்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.
தொடர்ந்து வீடுகளை இடிக்கும் பணி பிற்பகலில் நிறைவடைந்தது. இதில், 150 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. இந்நிலையில், டெல்லி மதராசி முகாமில் குடியிருக்கும் தமிழ் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் தாமதமின்றி வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. “மதராசி முகாம்” குடியிருப்பாளர்கள் தங்கள் சொந்த மாவட்டங்களுக்குத் திரும்ப விரும்பினால், அவர்களுக்குத் தமிழ்நாடு அரசு உதவிக் கரம் நீட்டும் என்றும் வாழ்வாதாரம் மற்றும் பிற அடிப்படை உதவிகளும் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு உறுதியளித்துள்ளது.
June 01, 2025 5:59 PM IST
நான்கு தலைமுறை வசிப்பிடத்தை இழந்த டெல்லி தமிழர்கள்.. தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு


