Last Updated:
தோனி அடுத்த ஐபிஎல் தொடரில் களமிறங்குவாரா என்பது பெரிய கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரை முடித்த பின்னர், தோனி தனது விருப்பமான பொழுதுபோக்குடன் நாட்களைக் கழித்து வருகிறார். இது குறித்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரலாறு காணாத அளவிற்கு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஐபிஎல் தொடரில் முதன் முறையாக சென்னை அணி இந்த முறை 10 ஆவது இடத்தில் தனது லீக் போட்டிகளை நிறைவு செய்துள்ளது.
14 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 8 புள்ளிகள் உடன் தரவரிசையில் கடைசி இடத்திற்கு சென்றுள்ளது. இந்தத் தொடரில் ருத்ராஜ் கெய்க்வாட் காயம் அடைந்த பின்னர் கேப்டன்ஷிப் பொறுப்பை தோனி ஏற்று செயல்பட்டார்.
இருப்பினும், தோனியாலும் கூட அணியை வெற்றிப்பாதைக்குக் கொண்டுவர முடியவில்லை. இருப்பினும், சென்னை அணியில் இந்த சீசனில் களமிறங்கியுள்ள புதுமுக வீரர்கள் நிறைவான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்துள்ளனர். இதனால் அடுத்த ஆண்டு சென்னை அணி புதிய உத்வேகத்துடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தோனி ஐபிஎல் தொடரை முடித்த பின்னர் தனது சொந்த ஊரான ராஞ்சியில் பொழுதைக் கழித்து வருகிறார்.
அவர் தனக்கு விருப்பமான பொழுதுபோக்குகளில் ஒன்றான மீன்பிடித்தலில் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

தோனி அடுத்த ஐபிஎல் தொடரில் களமிறங்குவாரா என்பது பெரிய கேள்வியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அவர் மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்ற நம்பிக்கையுடன் அவரது ரசிகர்கள் உள்ளனர்.


