Last Updated:
ஆர்சிபி அணி இந்த முறை ஐபிஎல் கோப்பையை வென்றால், அரசு பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என முதலமைச்சர் சித்தராமையாவுக்கு ரசிகர் ஒருவர் எழுதியுள்ள கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் குவாலிபையர் 1 தகுதி சுற்று போட்டி நேற்று நடைபெற்றது. பஞ்சாப் – ஆர்சிபி அணிகள் மோதிய இந்தப் போட்டியில், பஞ்சாப் அணியை எளிதாக வென்ற ஆர்.சி.பி. அணி 2025 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
17 வருட ஐபிஎல் போட்டிகளில் மூன்று முறை ஆர்சிபி அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஆனால், அந்த அணி இதுவரை ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றது கிடையாது. இந்த முறை அந்த அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வேளையில், இந்த முறை எப்படியும் கோப்பையை வென்றுவிட வேண்டும் என ஆர்சிபி அணி தீவிரமாகத் தயாராகி வருகிறது. அதேபோல், கடந்த 9 ஆண்டுகள் கழித்து, இந்த சீசனில்தான் ஆர்சிபி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆர்சிபி அணியைப் போலவே அந்த அணியின் ரசிகர்களும், இந்த முறை எப்படியும் கோப்பை வென்று வரலாற்றில் இடம் பெற வேண்டும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த தீவிர ஆர்சிபி ரசிகர் ஒருவர், தனது கைப்பட கர்நாடகா முதலமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கர்நாடகா மாநிலம், பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த சிவானந்த் மல்லன்னவர் என்ற ஆர்சிபி ரசிகர், அம்மாநில முதலமைச்சர் சித்தராமையாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “இந்த வருடம் ஆர்சிபி வென்றால், அந்த நாளை ஆர்சிபி ரசிகர்களின் திருவிழா என அதிகாரப்பூர்வமாக அறிவித்து, மாநிலம் முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு வருடமும் அந்த நாளில் கொண்டாட்டங்கள் நடத்த ஏதுவான சூழலையும் அரசு உருவாக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். இந்தக் கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


