Last Updated:
தாய்லாந்து வன உயிரியல் பூங்காவில், புலியுடன் செல்ஃபி எடுக்க முயன்ற இந்திய இளைஞரை, புலி திடீரென தாக்கியது.
தாய்லாந்து நாட்டில் பிரபலமான சுற்றுலா நடவடிக்கையாக புலியைத் தொட்டு, அதற்கு ஆகாரம் கொடுப்பது, அதன் மீது சாய்ந்தும், நம் மீது அதனை ஏறவைத்தும், அதன் வாலைப் பிடித்தப்படியும் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நடவடிக்கை இருந்துவருகிறது.
இதற்காக உலகம் முழுக்க இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்து நாட்டிற்குச் சென்றுவருகின்றனர். அதிலும், யூடியூபர்களின் பயணத்தால், தாய்லாந்தில் தற்போது இந்தச் சுற்றுலா நடவடிக்கை மிகவும் பிரபலமாகிவருகிறது.
இந்த நடவடிக்கையில், வன உயிரியல் பூங்கா ஊழியரும், புலியின் பயிற்சியாளருமான ஒருவர் எப்போதும் புலியுடன் இருப்பார்கள். அவர்களின் வழிகாட்டுதலின்படி புலி நடந்துகொள்ளும், அதேபோல், சுற்றுலாப்பயணிகளும் அந்த நபர் சொல்வதைப் பின்பற்றி புலியுடன் தங்கள் விருப்பம் போல் புகைப்படம் எடுத்துக்கொள்வர்.
அந்தவகையில், இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் சமீபத்தில் தாய்லாந்து நாட்டிற்குச் சுற்றுலாவுக்குச் சென்றுள்ளார். அங்கு ஃபூகெட் வன உயிரியல் பூங்காவில், புலியைக் கண்டு ரசிக்கவும், அதனுடன் போட்டோ எடுக்கவும் முடிவு செய்த அவருக்கு அதிர்ச்சிக்கரமான சம்பவம் நடந்திருக்கிறது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்திலும் வைரலாகிவருகிறது.
தாய்லாந்தில் இந்தியரை தாக்கிய புலி…
தாய்லாந்தில் புலிகளுடன் மக்கள் செல்ஃபி எடுக்க அனுமதிக்கப்படும் பூங்காவில், புலியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த போது அந்த நபரை தாக்கிய அதிர்ச்சி காட்சி#Thailand #News18Tamilnadu | https://t.co/3v5L32pe7b pic.twitter.com/Otz2tmIclY— News18 Tamil Nadu (@News18TamilNadu) May 30, 2025
இணையத்தில் வைரலாகும் வீடியோவின்படி, இந்திய இளைஞர் புலியுடன் போட்டோ எடுக்க முற்படுகிறார். அப்போது, கழுத்தில் சங்கிலியிடப்பட்டு புலி, தனது பயிற்சியாளருடன் இருக்கிறது. சங்கிலியை இந்திய இளைஞர் பிடித்திருக்க, புகைப்படம் எடுக்க அந்த இளைஞர் தயாரானார். அப்போது, அந்தப் பயிற்சியாளர் புகைப்படம் எடுப்பதற்காக அந்தப் புலியை அமரச் சொல்லித் தனது கையில் இருக்கும் குச்சியை வைத்து அதற்கு உத்தரவிடுகிறார். இந்தச் சம்பவம் நடந்துகொண்டிருக்கும் அதேசமயத்தில், நொடிப்பொழுதில், அந்தப் புலி திடீரென ஆவேசம் அடைந்து இந்திய இளைஞரைக் கொடூரமாகத் தாக்குகிறது.
தற்போதுவரை அந்த இளைஞருக்கு என்ன ஆனது, அவருக்கு எப்படியான காயம் ஏற்பட்டிருக்கிறது உள்ளிட்ட எந்தத் தகவலும் வெளியாகவில்லை. அதேசமயம், இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
புலியுடன் செல்ஃபி எடுக்க முற்பட்ட இளைஞர்.. தாய்லாந்து வன உயிரியல் பூங்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!


