Last Updated:
36 வயதான பாபாஜானுக்கு மூன்று மனைவிகள் மற்றும் 9 குழந்தைகள் உள்ளனர்.
கர்நாடகாவில் தனது மகனுடன் சேர்ந்து திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். மூன்று மனைவிகள் மற்றும் 9 குழந்தைகளை பராமரிப்பதற்காக திருடனாக மாறியவர் சிக்கியது எப்படி? என்பது குறித்து விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களுருவில் புறநகர் பகுதியில் ஒரு வீட்டில் 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டுள்ளன. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த எலக்ட்ரானிக்ஸ் சிட்டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், திருட்டில் ஈடுபட்ட 16 வயதான சிறுவன் மற்றும் 36 வயதான நபர் சிக்கியுள்ளனர். அவர்களை பிடித்து விசாரித்ததில், பெங்களூரு மற்றும் புறநகர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
அத்துடன், இருவரும் தந்தை மகன் என்பதை அறிந்து போலீசாரே அதிர்ச்சியடைந்துள்ளனர். 36 வயதான பாபாஜானுக்கு மூன்று மனைவிகள் மற்றும் 9 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் பாபாஜானின் சம்பாத்தியத்தை நம்பியே இருந்துள்ளனர். மிகப்பெரிய குடும்பத்தை ஒற்றையாளாக சமாளிக்க முடியாமல், கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார். இதனால், குறுக்கு வழியில் சம்பாதிக்கும் நோக்கில் தொழில்முறை திருடனாக மாறியுள்ளார்.
முன்னதாக 7 இடங்களில் கைவரிசை காட்டியும் போலீசிடம் சிக்காமல் திருட்டுத் தொழிலை தொடர்ந்துள்ளார். தற்போது, 8 ஆவது இடத்தில் கை வைத்த போது, தனது 16 வயது மகனுடன் கையும் களவுமாக சிக்கியுள்ளார். அவர்களிடம் இருந்து 23 சவரன் தங்க நகைகள், அரை கிலோவுக்கு மேற்பட்ட வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர், பாபாஜானை கைது செய்து, வேறு எங்கேனும் கைவரிசை காட்டியுள்ளாரா என்று போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மூன்று மனைவிகள் மற்றும் 9 குழந்தைகளை பராமரிப்பதற்காக, திருடனாக மாறியவர் கைது செய்யப்பட்டுள்ளதால், பெங்களூரு புறநகர் பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Bangalore,Karnataka
மூன்று மனைவிகள், 9 குழந்தைகளுக்காக விபரீத முயற்சி எடுத்த நபர்.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்!


