Last Updated:
இந்தத் தொடரில் இந்தியா பதக்கங்களைக் குவித்து வருவது தடகள ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பையும், பாராட்டையும் பெற்று வருகிறது.
ஆசிய தடகளப் போட்டித் தொடரில் ஸ்டீபிள் சேஸ் பிரிவில் இந்தியா தங்கம் வென்று அசத்தியுள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் அவினாஷ், 3 ஆயிரம் மீட்டர் தொலைவை 8.20 நிமிடங்களில் கடந்து தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.
ஆசிய தடகளப் போட்டிகள் தென் கொரியாவின் குமி நகரில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் குறிப்பிடும் விதமாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 வீரர்கள் இந்தியா சார்பாகப் பங்கேற்று உள்ளார்கள். இந்திய நேரப்படி நேற்று காலை 4.30 மணி அளவில் போட்டிகள் ஆரம்பமாகின.
நேற்று மட்டும் தமிழகத்தைச் சேர்ந்த பிரவீன் சித்திரவேல், மும்முறை தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தினார். 400 மீட்டர் தொடர் ஓட்டக் கலப்புப் பிரிவிலும் இந்தியாவுக்குத் தங்கம் கிடைத்தது.
இந்தத் தொடரில் ஓடிய 4 வீரர்களில் சந்தோஷ், விஷால் மற்றும் சுபா வெங்கடேசன் ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்த நிலையில், இரண்டாம் நாளான நேற்று ஸ்டீபிள் சேஸ் பிரிவில் இந்தியா தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.
இதில் இந்தியா சார்பாகப் பங்கேற்ற அவினாஷ், 3 ஆயிரம் மீட்டர் தொலைவை 8.20 நிமிடத்தில் கடந்து தங்கப் பதக்கத்தை வென்றார். 36 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 1989 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்த முறைதான் இந்தியா ஸ்டீபிள் சேஸ் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
நாளை மறுதினம் சனிக்கிழமை வரையில் ஆசிய தடகளப் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தத் தொடரில் இந்தியா பதக்கங்களைக் குவித்து வருவது தடகள ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பையும், பாராட்டையும் பெற்று வருகிறது.


