நிலைமை மோசமானதையடுத்து மாலை நேர பிற்பகுதிக்குப் பிறகு ரஷ்யா, உக்ரைன், ஜார்ஜியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 24 பணியாளர்களில் 21 பேரை இந்திய கடலோரக் காவல் படையினர் மீட்டனர். மீட்பு ஏற்பாடுகளுக்கு உதவ 3 மூத்த பணியாளர்கள் மட்டும் கப்பலில் இருந்தனர். அவர்கள் பெரும் போராட்டத்திற்குப் பிறகு கப்பலை கைவிடும் சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் சுஜாதா 3 பேரையும் பத்திரமாக மீட்டது. மோசமான நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்த கப்பல் 25ம் தேதி காலை 7.50 மணியளவில் கொச்சி கடற்கரையில் முழுவதுமாக மூழ்கியது. மோசமான காலநிலை காரணமாக கப்பல் சரிந்து மூழ்கியதாக கேப்டன் தரப்பில் உறுதி செய்யப்பட்டது.
கப்பலில் இருந்த 640 கண்டெய்னர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கண்டெய்னர்கள் கடலில் விழுந்து மிதந்து வருகின்றன. அதில் 13 கண்டெய்னர்களில் ஆபத்தான எண்ணெய் மற்றும் கியாஸ் ஆகியவை உள்ளதாகவும், 12 கண்டெய்னர்களில் சுமார் 250 டன் கால்சியம் கார்பைடு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி கப்பலில் உள்ள 84 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 367 மெட்ரிக் டன் பர்னஸ் எண்ணெய் ஆகியவையும் கடல்நீரில் பரவி சுமார் 2 கிலோமீட்டர் அளவுக்கு படர்ந்து காணப்படுகிறது. கண்டெய்னர்களில் உள்ள ஆபத்தான கெமிக்கல்கள் வெளியானால் பெரிய அளவிலான ஆபத்து ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதிலும் கால்சியம் கார்பைடு வெளியேறி தண்ணீருடன் கலந்தால் வெடிக்கும் தன்மை கொண்டது என்றும் கூறப்படுகிறது.
இதில், சில கண்டெய்னர்கள் காற்றின் காரணமாக கொச்சி கடற்கரை பகுதிகளில் கரை ஒதுங்கியது. கடலில் படர்ந்து கிடக்கும் சல்பர் கலந்த எண்ணெய் கசிவை உறிஞ்சி பிரித்து எடுக்கும் வகையில் கோஸ்ட் கார்ட் கப்பல்கள் நிகழ்விடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே ஒரு கண்டெய்னர் 25ம் தேதி இரவு கொல்லம் செறியாழிக்கல் அருகே கடற்கரையில் ஒதுங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரளா மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொண்டதன்பேரில், திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது. இதேபோல, ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் சுமார் 30 பேர் கொண்ட குழு கொல்லம் மாவட்டத்துக்கு விரைந்துள்ளனர்.
இதில் முக்கியமாக ஹெச்மாட் என்ற பேரிடர் கண்காணிப்பு வாகனமும் களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளது. மேலும், மூழ்கிய கப்பலுக்குச் சொந்தமான மெடிட்ரேனியன் ஷிப்பிங் கம்பெனியின் மற்றொரு கப்பல் சம்பவ இடத்துக்கு வந்துள்ளது. மோசமான வானிலை காரணமாக கப்பலில் இருந்து கடலில் விழுந்த கண்டெய்னர்களை கையாள்வது மிகவும் சவாலானதாக உள்ளதாக மீட்புப் படையினர் தெரிவிக்கின்றனர்.
கப்பல்கள் பயணிக்கும் சர்வதேச கடல் பாதையில் கண்டெய்னர்கள் மிதந்துகொண்டிருப்பது ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்பதால் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அந்தப் பாதையில் பயணிக்கும் கப்பல்களுக்கு இதுகுறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆபத்தை விளைவிக்கக் கூடிய கப்பல் கேரள கடற்கரை பகுதியில் கவிழ்ந்தது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

