• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வாக்களிக்கும் உரிமையுண்டு, வாக்களிக்கும் வாய்ப்பு? – News21 Tamil

GenevaTimes by GenevaTimes
May 27, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
வாக்களிக்கும் உரிமையுண்டு, வாக்களிக்கும் வாய்ப்பு? – News21 Tamil
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ச.பார்தீபன்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருந்த மே 7ஆம் திகதி காலை வேளையில், ஒரு வேலை நிமித்தம் மருதானை செல்வதற்கு நான் பேருந்தில் ஏறியபோது, என்னுடைய சக ஊடக நண்பனைக் கண்டேன். “ஹாய் மச்சான்.  ஓட்டு போட ஊருக்கு போய்ட்டு எப்ப வந்த” என்றேன். “எங்க மச்சான் ஊருக்கு போறது, வேல. ஓட்டுப் போட போகல, அநியாயம் மச்சான் ஒரு ஓட்டு. லாஸ்டா நடந்த பிரசிடன்ட் எலக்சனுக்கும் அப்படித்தான் லீவு கிடைக்கல” என அவன் சலித்துக் கொண்டான். “நானும்தான் மச்சான், இந்த எலக்சனுக்கு ஓட்டுப்போட போகல, டியுடி” என சொல்லிக்கொண்டே மருதானை பொலிஸ் நிலையத்தை அண்மித்த தரிப்பிடத்தில், பேருந்திலிருந்து இறங்கி வீதியை கடந்து சென்றேன்.

நாட்டில் இடம்பெறும் ஒவ்வொரு தேர்தலிலும் கட்டாயக் கடமை, விடுமுறை கிடைக்காமை, விடுமுறை கிடைத்தும் தூர இடங்களுக்கு பயணிக்க முடியாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் தமது வாக்குரிமையை பயன்படுத்துவதில்லை.   தன்னுடைய வாக்குரிமையை பயன்படுத்த முடியவில்லையே என்ற ஏக்கத்தை, என்னைப்போல், என் நண்பனைப்போல் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் வெளிப்படுத்திகொண்டுதான் இருக்கின்றார்கள். அடுத்தத் தேர்தலிலாவது தன்னுடைய அந்த வாக்கினை பதிவு செய்ய வேண்டுமென நினைக்கின்றார்கள். எனினும் அந்த வாய்ப்பு ஏதோ ஒரு காரணத்தினால் தொடர்ந்து கிடைக்காமலேயே போகின்றது.

இலங்கையராகிய எமக்கு பிரித்தானியர் ஆட்சிக்காலத்திலேயே (1931 – டொனமூர் யாப்பு) சர்வசன வாக்குரிமை கிடைத்துவிட்டது. (இடையில் இலங்கையை ஆண்ட அரசாங்களின் அரசியல் தீர்மானங்களால் ஒரு குறிப்பிட்ட இன மக்களுக்கு சிலகாலம் வாக்குரிமை பறிக்கப்பட்டதெல்லாம் வேறு கதை) சர்வசன வாக்குரிமை கிடைத்து நூறு வருட நிறைவை அண்மித்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால் அந்த வாக்குரிமையை பயன்படுத்துவதற்கான வாய்ப்பு அனைத்து இலங்கை மக்களுக்கும் கிடைக்கின்றதா? அந்த வாய்ப்பை அரசு உறுதிப்படுத்தியுள்ளதா? என்றால், நிச்சியமாக இல்லை. ஏதோ ஒரு காரணத்திற்காக வாக்குரிமை இருந்தும், வாக்களிக்கும் விருப்பம் இருந்தும், வாக்களிப்பதற்கான வாய்ப்பின்றி ஆயிரக்கணக்கான வாக்குகள் ஒவ்வொரு தேர்தலிலும் அளிக்கப்படாமலேயே போகின்றன. இவற்றுக்கான காரணங்களையும், அதற்கான தீர்வுகளையும் முன்வைக்க முனைகிறது இந்த கட்டுரை.

வாக்களிக்கும் வாய்ப்பை இழப்பவர்கள்

அத்தியாவசிய கடமையில் ஈடுபடும் அரச ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் (பணிக்குச் செல்வோர்), வர்த்தக வலையங்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றுவோர், நீண்டநாள் மீன்பிடி தொழிலாளர்கள், வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைப் பெறும் நோயாளிகள், சிறைக்கைதிகள், வைத்தியர்கள், தாதியர் உள்ளிட்ட வைத்தியத்துறைசார் அதிகாரிகள், ஊழியர்கள், தேர்தல் கடமையில் ஈடுபடும் ஊடகவியலாளர்கள், போக்குவரத்து வசதியை பெற்றுக்கொள்ள முடியாத மாற்றுத்திறனாளிகள், அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர், தூரப் பயணங்களில் ஈடுபடும் சாரதிகள் மற்றும் பலர்…

ஒரு வேட்பாளரின் வருத்தம்

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டம், வலப்பனை பிரதேச சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இந்தத் தேர்தலில் தன்னுடைய தோல்விக்கு, பலர் வாக்களிக்காமல் போனமையே காரணம் என்கிறார். “என்னுடைய பல நண்பர்கள் கொழும்பு, கண்டி இப்படி பல இடங்கள்ல வேலை செய்றாங்க. சித்திரைக்கு (சித்திரை வருடப் பிறப்பு) ஊருக்கு வந்துட்டு போனதால, அவங்களுக்கு  ஓட்டுப்போட லீவு கிடைக்கல. குறைந்தது இந்த பிரதேசத்துல எனக்கு தெரிஞ்ச ஒரு 100 பேராவது ஓட்டுபோடல. அந்த ஓட்டு வந்துருந்தா நான் கண்டிப்பா வின் பண்ணிருப்பேன்.” என்கிறார் குமார்.

உண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வலப்பனைத் தேர்தல் தொகுதியில் 91, 962 வாக்குகளில் பதிவு செய்யப்பட்டிருந்தன. எனினும் 57,170 வாக்குகள் மாத்திரமே அளிக்கப்பட்டிருந்தன. 34,792 வாக்குகள் ஏதோ ஒரு காரணத்திற்காக அளிக்கப்படவில்லை. உண்மையில் இந்த தேர்தல் சிறிய ஒரு தேர்தல் என்பதால் பலருக்கு வாக்களிக்கும் விருப்பம் இருந்திருக்காது என்பது பொதுவான கருத்து, எனினும் அதனைத் தாண்டி வேட்பாளர் குமார் சொன்னதுபோல், வாக்களிக்கும் விருப்பம் இருந்தும் அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள்/கிடைக்காதவர்கள் ஏராளம்.

ஊடகவியலாளர் கலாவர்சினி கனகரட்ணம்

“எதுக்கு சும்மா”

கடந்த கால தேர்தல் வெற்றிகளின் சதவீதத்தையும், வாக்களிக்காதவர்களின் சதவீதத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இதன் பாரதூரம் தெரியவரும். ஒருவேளை பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் அனைத்தும் செலுத்தப்பட்டிருந்தால், பெறுபேறுகள் வேறு வகையில் அமைந்திருப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன என்கிறார் ஊடகவியலாளர் கலாவர்சினி கனகரட்ணம்.

“வாக்களிப்பின் தாற்பரியம் பற்றி உணராத நிலையே ஒட்டுமொத்தமாக காணப்படுகின்றது. எமது ஒரு வாக்கினால் எதுவும் மாறப்போவதில்லை என்ற மனநிலை பலர் மத்தியில் காணப்படுகின்றது. கடந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் நாடு முழுவதும் வாக்காளர் கல்வி செயலமர்வுகளை நடத்தியிருந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான பல விடயங்களை அறிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது. இது மிகப்பெரிய தவறு. இதற்கு சிறந்த உதாரணம், 2011 உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தின் கொலன்ன பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகள் 10,075, ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகள் 10,074. இங்கு ஒரேயொரு வாக்குதான் வித்தியாசம். ஆனால், இந்த வித்தியாசம் ஏற்படுத்திய மாற்றத்தை பார்த்தால், மூன்று ஆசனங்கள். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 6 ஆசனங்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 3 ஆசனங்களும் பகிரப்பட்டன. இவ்வாறு எவ்வளவோ உதாரணங்கள் உள்ளன. ஆனால் இவ்வாறான விடயங்கள் மக்கள்மயப்படுத்தப்படுவது குறைவு. தமது தெரிவுகள் சரியாக அமையவேண்டுமென நினைக்கின்றார்களே தவிர, அந்த தெரிவுகளுக்கான ஜனநாயக கடமை சரியாக நிறைவேற்றப்படுகின்றதா என்பது குறித்து சிந்திக்க தவறிவிடுகின்றனர்.” என்கிறார் அவர்.

உண்மையில் வாய்ப்பு கிடைக்காமல் செலுத்தப்படாத வாக்குகளைவிட வாய்ப்பிருந்தும் “எதுக்கு சும்மா” என வாக்களிப்பதை சிறிய விடயமாகக் கருதி கடந்துப் போகின்றவர்கள் ஏராளம்.

வாக்களிப்பு நிலையமும் தூரமும்

வாக்களிப்பு நிலையங்களுக்கும் வாக்காளர்களுக்கும் இடையிலான தூரம் அதிகமாக இருக்கின்ற போது வாக்காளர்கள் சென்று வாக்களிப்பதை தவிர்க்கும் சம்பவங்களும் பதிவாகின்றன. குறிப்பாக மலையகத்தின் பலப் பிரதேசங்களில் அமைக்கப்படும் வாக்களிப்பு நிலையங்களுக்கு நீண்டதூரம் நடந்து சென்று வாக்களிக்க வேண்டிய நிலைமை காணப்படுவதாலும் பலர் வாக்களிப்பதில்லை. கட்டுரையாளனாக இதுத் தொடர்பில் நான் வினவியபோது, படிகளில் ஏறி இறங்கி நடந்துச் செல்ல மூத்த பிரஜைகள் பலர் விரும்புவதில்லை அல்லது அவர்களால் முடிவதில்லை என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. முச்சக்கர வண்டி உள்ளிட்ட போக்குவரத்து ஏற்பாடுகளுக்கு அவர்களிடம் போதிய பணம் இன்மையும் அவர்கள் வாக்களிப்பை தவிர்ப்பதற்கு காரணமாக அமைகின்றது.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் வாக்களிப்பு நிலைமை

பதிவு செய்யப்பட்ட வாக்குகள் – 17,156,338
அளிக்கப்பட்ட வாக்குகள் – 10,616,087 (61.88%)
அளிக்கப்படாத வாக்குகள் – 6,540,251 (38.12%)

விடுமுறை

மே 6ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இதற்கமைய ஊழியர் ஒருவர் வாக்களிப்பதற்காக விடுமுறை கோரினால், அது தொடர்பாக பணிக்கு அமர்த்துபவர், ஊழியருக்கு போதுமானதாக கருதப்படும் குறைந்தபட்சம் இரண்டு மணி நேர பணி விடுமுறையை ஊதியத்துடன் வழங்க வேண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்களிக்க தகுதி பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் அவர்களது நிறுவனங்கள் விடுமுறை வழங்க வேண்டும் எனவும் இவ்வாறு வழங்கப்படும் விடுமுறை காலம், தற்காலிக ஊழியர்கள் உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விசேட விடுமுறையாக கருதப்பட வேண்டும் எனவும், இது ஊழியர்களின் வழக்கமான விடுமுறை உரிமைகளுக்கு வெளியில் இருக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. ஒவ்வொரு தொழிலாளருக்கும் வாக்களிப்பதற்காக வழங்கப்படும் விடுமுறை காலம், அவரது பணியிடம் மற்றும் வாக்களிப்பு நிலையத்திற்கு இடையிலான தூரத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தூரம், 40 கிலோமீற்றர் அல்லது அதற்குக் குறைவாயின் அரை நாள் (1/2) 40 – 100 கிலோமீற்றருக்கு இடைப்பட்டதெனில் ஒரு நாள் (1), 100 – 150 கிலோமீற்றருக்கு இடைப்பட்டதெனில் ஒன்றரை 11/2 நாட்கள், 150 கிலோமீற்றருக்கும் அதிகமாயின் இரு நாட்கள் விடுமுறை வழங்கப்பட வேண்டுமென அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த நடைமுறையை எத்தனை நிறுவனங்கள் பின்பற்றின? என்பது கேள்விக்குறியே.

தேர்தல் ஆணைக்குழு முன்வைக்கும் தீர்வு

இலங்கையர்கள் அனைவரும் தமது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாய்ப்பளிக்க வேண்டுமென்பதை இலக்காகக் கொண்டே தேர்தல்கள் ஆணைக்குழு செயற்படுவதாக தெரிவிக்கும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் (நிர்வாகம்) எஸ். அச்சுதன், இந்த விடயத்தில் நாடாளுமன்றமே இறுதி தீர்மானத்தை எடுக்க வேண்டுமெனவும் சுட்டிக்காட்டுகின்றார்.

“நாங்கள் நாடாளுமன்ற தெரிவுக் குழுக்களுக்கு நாங்கள் எங்களுடைய முன்மொழிவுகளை வழங்கியுள்ளோம். இதில் இரண்டு முன்மொழிவுகள் காணப்படுகின்றன. இதில் முதலாவது முற்கூட்டிய வாக்குப்பதிவு (Early voting)  முற்கூட்டிய வாக்குப் பதிவு எனக் குறிப்பிடுகையில் அதில் நாங்கள் ஊடகவியலாளர்கள், அத்தியாவசிய சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள், நோயாளிகள், சிறையில் இருப்பவர்கள் என அனைரையும் அதில் இணைப்பது பற்றி முன்மொழிவை முன்வைத்திருக்கின்றோம். அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டு,  சட்ட வரைஞர் திணைக்களத்திற்கு  அதனை கொண்டுபோய் பின்னர் அதனை நாடாளுமன்றத்தில் சட்டமாக்குவது மட்டும்தான் எஞ்சியுள்ள பணி.” என்கிறார் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் அச்சுதன்

பயோமெட்ரிக் அடையாள அட்டையை பயன்படுத்தி இலங்கையருக்கு முற்கூட்டிய வாக்குப் பதிவு வாய்ப்பை வழங்குவதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் இரண்டாவதும் இறுதியுமான இலக்கு எனவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் (நிர்வாகம்) எஸ். அச்சுதன் மேலும் குறிப்பிடுகின்றார்.

“அடுத்தகட்டமாக இலங்கையில் பயோமெட்ரிக் அடையாள அட்டையை (Biometric identity card) உருவாக்குவது குறித்த முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. நீண்டகாலகவே இந்த முயற்சி இடம்பெறுகிறது. அந்த ஒரு நிலைமை ஏற்படுமாயின் வாக்காளர் பட்டியலையும் இந்த பயோமெட்ரிக் அடையாள அட்டையுடன் இணைக்கும்போது எந்தவொரு மாவட்டத்திலும் முற்கூட்டி வாக்களிப்பது (Early voting) இலகுவாக காரியமாக மாறும். பொதுவாக நாங்கள் வகைப்படுத்தாமல் எந்தவொரு வாக்காளருக்கும் முற்கூட்டிய வாக்களிப்பு வாய்ப்பை வழங்குவது இகுவான விடயமாக அமையும். ஆகவே தேர்தல் ஆணைக்குழுவின் இறுதி இலக்கு அதுதான். அதற்காக தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருக்கின்றோம்.

மேலும் கடந்த வருடம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முடிவுகளுக்கு அமைய தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவான விடயத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்த தேர்தல்கள் ஆணைக்குழு, அந்த சந்தர்ப்பத்தில் அனுர குமார திசாநாயக்கவிடம் விடுத்த வேண்டுகோள் மற்றும் அதற்கு ஜனாதிபதியாக அவர் வழங்கிய வாக்குறுதியையும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஞாபகப்படுத்தினார்.

“தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் வெற்றிபெற்றவரை ஜனாதிபதியாக அறிவிப்பது தேர்தல் ஆணைக்குழுவின் ஒரு பணி, ஆணைக்குழு அதனை அறிவிக்கும் அந்த நேரத்தில் இருந்து ஜனாதிபதியின் பதவிக்காலம் ஆரம்பமாகும். இதற்கமைய கடந்த வருடம் ஜனாதிபதி வெற்றிபெற்றதை அறிவித்த சமயத்தில் இவ்வாறு நிறைவேற்றப்படாத சட்டங்களை நிறைவேற்றித்தருமாறும், நடத்தப்படாமல் இருக்கும் தேர்தல்களை நடத்துவதற்கு  எமக்கு உதவுமாறும் நாம் கோரிக்கை விடுத்தோம். ஜனாதிபதி தான் அதனை செய்வதாக அறிவித்திருந்தார். அதனை ஜனாதிபதி செய்வார் என எதிர்பார்க்கின்றோம்.” என்கிறார் அவர்.

முன்மொழிவுகள்

தேர்தல் தினத்தன்று கட்டாய கடமையில் உள்ளோருக்கு அரச, தனியார் துறை என்ற பாகுபாடு இன்றி, தபால்மூல வாக்களிப்பு வாய்ப்பை வழங்க முடியும்.
சொந்த மாவட்டத்தைவிட்டு வெளி மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலேயே வாக்களிப்பதற்கான வாய்ப்பை வழங்க முடியும். இதற்கென விசேட வாக்குச் சாவடியை உருவாக்க முடியும். (மாத்தறையில் உள்ளவருக்கு கொழும்பிலும், கண்டியில் உள்ளவருக்கு யாழ்ப்பாணத்திலும், மன்னாரில் உள்ளவருக்கு காலியிலும் வாக்களிப்பதற்கான வாய்ப்பை உருவாக்குதல்)
வர்த்தக வலையங்கள் போன்ற இடங்களில் விசேட வாக்குச்சாவடியை உருவாக்க முடியும்.
பயணித்து வாக்களிக்க இயலாத விசேட தேவையுடையோருக்கு நடமாடும் வாக்களிப்பு வசதியை (mobile voting system) ஏற்படுத்தலாம்.
அரசியல் ரீதியாக தாங்கள் கொண்டுள்ள கருத்தியல் காரணமாக வாக்களிக்காமல் உள்ளவர்களின் தொகைதான் அதிகம். ஆகவே அவர்களுக்கு ‘மேலே உள்ளவை எதுவும் இல்லை’ ( NONE OF THE ABOVE – NOTA) என்ற விடயம் வாக்குச் சீட்டில் சேர்க்கப்பட முடியும். இந்தியா போன்ற நாடுகளில் இந்த தெரிவு காணப்படுகிறது.

பலருக்கு ‘ஒரு வாக்கினுடைய’ பலம் தெரிவதில்லை. அது எத்தகைய மாற்றத்தே ஏற்படுத்தும் என்பதை அறியாதவர்களாகவே இருக்கின்றார்கள். ஆகவே ஜனநாயக கடமையை நிறைவேற்றுவது உள்ளிட்ட அடிப்படை அரசியலை அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் கடடாய பாடமாக்க முடியும். அதேபோன்று, வளர்ந்தோருக்கு வாக்காளர் கல்வியை வழங்குவது அவசியம்.

இவை உள்ளிட்ட பல்வேறு முன்மொழிவுகள், ஆலோனைகளை பலர் தொடர்ச்சியாக முன்வைத்தாலும் இலங்கையில் இருக்கக்கூடிய அரசியல் மற்றும் அரச நிர்வாகக் கட்டமைப்புச் சிக்கல்களால் உரிய நடைமுறைகளை ஏற்படுத்துவதில் தொடர் காலத்தாமதம் ஏற்படுகின்றது. கடந்த கால தேர்தல் பெறுபேறுகளின் விகிதம் மற்றும் வாக்களிக்காதவர்களின் விகிதம் என்பவற்றை அவதானித்து, அதன் பாரதூரத்தை உணர்ந்து, இப்பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டுமென்பதே பலரது வேண்டுகோளாக அமைந்துள்ளது.

இந்தக் கட்டுரை தமிழன் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரையாகும்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

சுந்தரம் பைனான்ஸ் நிகர லாபம் ரூ.1,543 கோடியாக அதிகரிப்பு | Sundaram Finance net profit increases to Rs 1543 crore

Next Post

பாகிஸ்தானில் ஜோதி மல்ஹோத்ராவுக்கு ஏகே-47 துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு: ஸ்காட்லாந்து யூடியூபர் அதிர்ச்சி தகவல் | Jyoti Malhotra gets security with AK-47 rifle in Pakistan

Next Post
பாகிஸ்தானில் ஜோதி மல்ஹோத்ராவுக்கு ஏகே-47 துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு: ஸ்காட்லாந்து யூடியூபர் அதிர்ச்சி தகவல் | Jyoti Malhotra gets security with AK-47 rifle in Pakistan

பாகிஸ்தானில் ஜோதி மல்ஹோத்ராவுக்கு ஏகே-47 துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு: ஸ்காட்லாந்து யூடியூபர் அதிர்ச்சி தகவல் | Jyoti Malhotra gets security with AK-47 rifle in Pakistan

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin