Last Updated:
வருவாய் குறைதல், தொடர்ச்சியான பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் பாரம்பரிய வணிக செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவின் செல்வாக்கு ஆகியவை பணி நீக்கத்திற்கு காரணமாக சொல்லப்படுகின்றன.
2025-ம் ஆண்டில் மற்றொரு சுற்று பணியாளர் குறைப்புக்கு தயாராகி வருகிறது தொழில்நுட்பத் துறை. மைக்ரோசாப்ட், கூகிள், அமேசான் மற்றும் க்ரவுட்ஸ்ட்ரைக் போன்ற தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்கும் ஜாம்பவான்கள் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளைக் குறைத்துள்ளனர். வருவாய் குறைதல், தொடர்ச்சியான பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் பாரம்பரிய வணிக செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவின் செல்வாக்கு ஆகியவை பணி நீக்கத்திற்கு காரணமாக சொல்லப்படுகின்றன.
இந்த ஆண்டு மட்டும் இதுவரை 130-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 61,000-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மைக்ரோசாப்ட் 6,000 பேரைக் குறைத்துள்ளது. இது 2023-ம் ஆண்டுக்குப் பிறகு அந்நிறுவனத்தின் மிகப்பெரிய பணிநீக்கமாகும். இந்த நடவடிக்கை அதன் நிர்வாக கட்டமைப்பை நெறிப்படுத்துவதையும் பொறியியல் திறமைக்கு முன்னுரிமை அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.
கூகுள் அமைதியாக அதன் பணியாளர்களை மறுவடிவமைக்கிறது
2023-ம் ஆண்டில் 12,000 பேரைப் பணிநீக்கம் செய்ததன் மூலம் தொடங்கிய கூகுள் நிறுவனத்தின் மறுசீரமைப்பு செயல்முறை, 2025-ம் ஆண்டிலும் தொடர்கிறது. மே மாத தொடக்கத்தில், விளம்பர விற்பனை மற்றும் கூட்டாண்மைகளை நிர்வகிக்கும் அதன் உலகளாவிய வணிக அமைப்பிலிருந்து சுமார் 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது கூகுள். அதன் செயல்பாட்டு மாதிரியைச் செம்மைப்படுத்துவதற்காக ஏற்கனவே பிக்சல், ஆண்ட்ராய்டு, குரோம் மற்றும் கிளவுட் பிரிவுகளில் இருந்த வேலை குறைப்புகளைத் தொடர்ந்து இதுவும் நிகழ்கிறது.
அமேசான் நிறுவனமும் பணியாளர் குறைப்பு நடவடிக்கைகளுக்குத் திரும்பியுள்ளது. அதன் சாதனங்கள் மற்றும் சேவைகள் பிரிவில் 100 வேலைகளைக் குறைத்துள்ளது. இந்த பிரிவில் அலெக்சா, கிண்டில் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனமான Zoox ஆகியவை அடங்கும். சைபர் பாதுகாப்பு நிறுவனமான CrowdStrike, கடந்த வாரம் அதன் உலகளாவிய பணியாளர்களில் 5% பேரை நீக்கி பணிநீக்க டிரெண்டிங்கில் இணைந்தது. வளர்ந்து வரும் சந்தை இயக்கவியலுக்கு மத்தியில் நீண்டகால லாபத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கை இது என நிறுவனம் விவரித்துள்ளது.
பல நூறு ஊழியர்கள் செய்து வந்த வேலையை செயற்கை நுண்ணறிவு அடியோடு மாற்றியுள்ளது என்றும், மேலும் ஆட்களைக் குறைப்பதற்குப் பதிலாக, வளர்ச்சிக்கு முக்கியமான பகுதிகளில் மீண்டும் முதலீடு செய்து வருவதாகவும் பணிநீக்க நடவடிக்கை குறித்து ஐபிஎம் தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு நிறுவனத்திற்கும் இடையே உத்திகள் வேறுபட்டாலும், பொதுவான கருப்பொருள் ஒன்று வெளிப்படுகிறது. அது, விரிவாக்கத்தைவிட செயல்திறன் மற்றும் தகவமைப்புத் தன்மை முன்னுரிமை பெறுகின்றன. செயற்கை நுண்ணறிவின் திறன் நாளுக்குநாள் மெருகேற, இன்னொரு பக்கம் பொருளாதாரத் தடைகள் தொடர்வதால், தொழில்நுட்ப நிறுவனங்கள் வேகமாக வளர்ந்துவரும் துறையில் போட்டித்தன்மையுடன் இருக்க பணியாளர் கட்டமைப்புகளை மறு மதிப்பீடு செய்கின்றன.
2025-ம் ஆண்டில் 61,000 வேலை இழப்பு… ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் மைக்ரோசாப்ட், ஐபிஎம், கூகுள், அமேசான் நிறுவனங்கள்…!


