Last Updated:
அணியில் மூத்த வீரர்கள் சிலர் உள்ள சூழலில், கில் எப்படி அவர்களை ஒருங்கிணைத்து டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு வெற்றியை தேடி தரப் போகிறார் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியில் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாக இளம் வீரர் சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மூத்த வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் கொடுத்துள்ள அறிவுரை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கு 25 வயதாகும் சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதை தொடர்ந்து அவருக்கு பதிலாக கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார் கில்.
அணியில் மூத்த வீரர்கள் சிலர் உள்ள சூழலில், கில் எப்படி அவர்களை ஒருங்கிணைத்து டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு வெற்றியை தேடி தரப் போகிறார் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில் புதிய கேப்டன் குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறியதாவது,
“இந்திய அணியில் கேப்டனாக இருப்பவருக்கும், வீரராக இருப்பவருக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. இந்திய அணியில் விளையாடி கேப்டனாக தேர்வு செய்யப்படும் வீரர் மீது அதிக அழுத்தம் இருக்கும். ஏனென்றால், நீங்கள் அணியில் ஒரு உறுப்பினராக இருக்கும்போது எல்லோரும் வீரர்களிடமும் இயல்பாக பழகுவீர்கள்.
ஆனால், கேப்டனாக வந்துவிட்டால் உங்களுடைய அணுகு முறையில் மாற்றம் இருக்கும். மற்ற வீரர்கள் உங்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். எல்லாவற்றையும் விட ஒரு கேப்டனின் அணுகுமுறை, அதாவது மற்ற வீரர்களிடம் அவர் எப்படி நடந்து கொள்கிறார் என்பது அவருக்கு இருக்கும் திறமையை விடவும் மிக முக்கியமானதாக கருதப்படும்” என்று தெரிவித்துள்ளார்.


