Last Updated:
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் அதிவேகமாக 13,000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை ஜோ ரூட் பெற்றுள்ளார்.
இங்கிலாந்துக்கு ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இதன் முதல் நாளில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
எனினும் டெஸ்ட் போட்டிகளில் வெறும் 153 போட்டிகளிலேயே 13,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமைக்கு ஜோ ரூட் சொந்தக்காரரானார். இதற்கு முன்னர் ஜாக் காலிஸ் 159 போட்டிகளிலும், ராகுல் டிராவிட் 160 போட்டிகளிலும், பாண்டிங் 162 போட்டிகளிலும், சச்சின் 163 போட்டிகளிலும் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.
மேலும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ஜோ ரூட் 5-ஆவது இடத்தில் இருக்கிறார். முதல் இடத்தில் இந்திய ஜாம்பவான் சச்சின் இருக்கும் நிலையில் அவரை விட 2,915 ரன்கள் குறைவான நிலையில் ஜோ ரூட் உள்ளார்.
இந்த பட்டியலில் 2-ஆவது இடத்தில் 13,378 ரன்களுடன் ரிக்கி பாண்டிங்கும், 13,289 ரன்கள் எடுத்து காலிஸும், 13,288 ரன்களுடன் ராகுல் டிராவிட் நான்காவது இடத்திலும் உள்ளனர். இன்னும் 284 ரன்கள் எடுத்தால் அவர் டிராவிடை பின்னுக்கு தள்ளுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


