Last Updated:
காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் 9 பாக் தீவிரவாதி முகாம்களை அழித்தது. பின்னர், ஜெய்பூர் இனிப்பகங்கள் ‘பாக்’ பதத்தை ‘ஸ்ரீ’ என மாற்றியது.
காஷ்மீர், பஹல்காம் சுற்றுலாதளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நான்கு பயங்கரவாதிகள் நடத்திய பயங்கரத் தாக்குதலில் 26 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். இதனையடுத்து இதற்கு பதிலடி கொடுத்த இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடத்தி பாகிஸ்தானில் இருந்த 9 தீவிரவாதி முகாம்களை அழித்தது.
இந்தியாவின் இந்த தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவின் எல்லைக் கிராமங்களின் மீது உள்ள மக்கள் மீதும், வான்வழித் தாக்குதலையும் நடத்தியது. ஆனால், இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு பாகிஸ்தானின் அனைத்து வான் வழித் தாக்குதலைத் தடுத்து நிறுத்தி அழித்தது.
இதன் பிறகு இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் அமெரிக்காவின் தலையீடோடு அது முடிவுக்கு வந்து சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது. முன்னதாக பஹல்காம் தாக்குதல் நடந்ததும், இந்தியா பாகிஸ்தான் மீது ராஜாங்க ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதில் முக்கியமானது சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தியது. அதேபோல், பாகிஸ்தானும் சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்தது.
அதேபோல், ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடந்ததும், பாகிஸ்தானுக்கு உதவிய துருக்கி நாட்டின் பொருள்களையும், சுற்றுலாவையும் இந்தியர்கள் புறக்கணிப்பதாக அறிவித்தனர். இந்நிலையில், தற்போது இந்தியாவில் இருக்கும் இனிப்புவகைகளின் பெயர்களில் இடம் பெற்றிருக்கும் ‘பாக்’ எனும் பதத்தைப் புறக்கணித்து இனிப்புகளுக்கு ஒரு மாநிலத்தின் தலைநகரம் புதுப் பெயரைச் சூட்டியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் உள்ள இனிப்பகங்கள் தங்கள் கடையில் இருக்கும் ‘பாக்’ எனும் பதம் கொண்ட இனிப்புகளின் பெயர்களை மாற்றியுள்ளது. அதன்படி தற்போது ‘பாக்’ என்பதற்குப் பதிலாக ‘ஸ்ரீ’ என்று பயன்படுத்தப்படுகிறது.
அதாவது இனி, மைசூர் பாக், மோத்தி பாக், ஆம் பாக், கோந்த் பாக் உள்ளிட்ட இனிப்புகள், மைசூர் ஸ்ரீ, மோத்தி ஸ்ரீ, ஆம் ஸ்ரீ, கோந்த் ஸ்ரீ எனப் பெயர் கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டு, அதன் பெயர்களிலேயே விற்பனை நடந்துவருகிறது.


