Last Updated:
தொடரிலிருந்து வெளியேறியுள்ள நிலையில் இந்த மேட்சில் வெற்றி பெற்றிருப்பது லக்னோ வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 64 ஆவது லீக் போட்டியாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதிய போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக எய்டன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக ரன்கள் குவித்து ஸ்கோரை உயர்த்தினர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் மார்க்ரம் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதைத் தொடர்ந்து இணைந்த மிட்செல் மார்ஷ் மற்றும் நிக்கோலஸ் பூரன் அதிரடியாக ரன்கள் குவித்தனர். இருவரும் சிக்சரும் பவுண்டரிகளாக விளாச அணியின் ஸ்கோர் விறுவிறு என உயரத் தொடங்கியது. 64 பந்துகளை எதிர்கொண்ட மிட்செல் மார்ஷ் 117 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
27 பந்துகளை எதிர்கொண்ட நிக்கோலஸ் பூரன் 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் நின்றார். 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி 235 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகக் கடினமான இலக்கை நோக்கி குஜராத் அணியின் பேட்ஸ்மேன்கள் களமிறங்கினர். தொடக்க வீரர் சாய் சுதர்சன் 21 ரன்கள் எடுத்து வெளியேறினார். கேப்டன் சுப்மன் கில் 35 ரன்களும், ஜாஸ் பட்லர் 33 ரன்களும் எடுத்தனர்.
ரூதமர்போர்டு 38 ரன்கள் சேர்த்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஷாரூக்கான் 29 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டத்தை கடைசி வரைக்கும் எடுத்துச் சென்றார். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணி 202 ரன்கள் மட்டுமே எடுத்து 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியுள்ள நிலையில் இந்த மேட்சில் வெற்றி பெற்றிருப்பது லக்னோ வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.
May 22, 2025 11:53 PM IST


