Last Updated:
ஆலங்கட்டி மழையால் இண்டிகோ விமானம் சேதமடைந்து, 227 பயணிகளுடன் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
தலைநகர் டெல்லியில் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், புழுதிப்புயல் புரட்டி எடுத்தது. ஆலங்கட்டி மழையால் நடுவானில் சேதமடைந்த விமானம், அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
தலைநகர் டெல்லியில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் கொளுத்தி வந்தது. இந்நிலையில் நேற்று மாலை கனமழை கொட்டித் தீர்த்தது. ஹரியானா மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் ஏற்பட்ட காற்றின் சுழற்சி காரணமாக இந்த வானிலை மாற்றம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மணிக்கு 79 கி.மீ வேகம் வரை காற்று வீசிய நிலையில் புழுதிப்புயலால், வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். யமுனா விஹார், பஜன்புரா மற்றும் கோஹல்புரி பகுதியில் உள்ள மக்கள் புழுதிப்புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
நகரின் சில பகுதிகளில் கனமழையுடன் சேர்த்து ஆலங்கட்டி மழையும் பெய்தது. சாலையில் விழுந்த ஐஸ்கட்டிகளை எடுத்து பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர். அதேபோல பலத்த காற்றால் பல பகுதிகளில் மரங்கள் விழுந்தன. சாலையில் சென்ற வாகனங்கள் மீது மரங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய பகுதியிலும் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. கடும் மழை மற்றும் புழுதிப்புயலால் டெல்லியில் இருந்து புறப்படும் விமானச் சேவைகளும், தரையிறங்க வேண்டிய விமானச் சேவைகளும் பாதிக்கப்பட்டு, காலதாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் நோக்கிச் சென்ற இண்டிகோ விமானம் ஒன்று, நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது ஆலங்கட்டி மழையால் முன்பகுதி சேதமடைந்தது. பயணிகள் அச்சமடைந்த நிலையில், விமானியின் சாமர்த்தியத்தால் 227 பயணிகளுடன் விமானம் பாதுகாப்புடன் ஸ்ரீநகரில் தரையிறக்கப்பட்டது.
கனமழையால் டெல்லி பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் நிலையில் மீட்புப் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Srinagar,Jammu and Kashmir
May 22, 2025 10:39 AM IST


