Last Updated:
உள்ளூரில் நடைபெறும் போட்டி என்பதால் ஆட்டத்தின் 2 ஆவது பாதியில் மும்பை அணி உத்வேகத்துடன் களமிறங்க உள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வான்கிடே மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள மும்பை அணி 180 ரன்கள் குவித்துள்ளது.
இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மும்பை அணி மொத்தம் 16 புள்ளிகளைப் பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விடும். சிறப்பான பவுலிங் மற்றும் உள்ளூரில் நடைபெறும் போட்டி என்பதால் ஆட்டத்தின் 2 ஆவது பாதியில் மும்பை அணி உத்வேகத்துடன் களமிறங்க உள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற டெல்லி அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதில் கேப்டன் அக்சர் படேல் விளையாடவில்லை. கேப்டன்ஷிப் பொறுப்பை ஃபாஃப் டூப்ளசிஸ் ஏற்றுக் கொண்டார்.
தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து மும்பை அணி தடுமாறியது. ரியான் ரிக்கெல்டன் 25 ரன்களும், ரோஹித் சர்மா 5 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
வில் ஜாக்ஸ் 21 ரன்களும், திலக் வர்மா வர்மா 27 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவர்களில் அதிரடியாக ரன்கள் குவித்த சூர்யகுமார் யாதவ் 43 பந்துகளில் 4 சிக்சர் 7 பவுண்டரியுடன் 73 ரன்கள் எடுத்து ஸ்கோரை உயர்த்தினார்.
நமன் திர் 8 பந்துகளில் தலா 2 சிக்சர் பவுண்டரியுடன் 24 ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 180 ரன்கள் குவித்தது. ஒரு கட்டத்தில் 150 ரன்களை கடக்குமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் கடைசி 2 ஓவர்களில் மட்டும் அந்த அணி 48 ரன்களை அதிரடியாக குவித்தது.
இதையடுத்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர்.
இன்றைய ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விடும். டெல்லி வெற்றி பெற்றால் அந்த அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும்.


