Last Updated:
இந்தியா ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து விலகுவதாக பரவிய தகவலுக்கு பிசிசிஐ தலைவர் விளக்கமளித்துள்ளார்.
ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து இந்தியா விலகுவதாக எழுந்த தகவலில் உண்மையில்லை என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் விளக்கமளித்துள்ளது.
துணைக் கண்டங்களில் கிரிக்கெட்டை வளர்க்கும் நோக்கில், 1983 ஆம் ஆண்டு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்புக்கு ஜெய் ஷா தலைமையேற்றிருந்த நிலையில், அண்மையில் அவர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகப் பொறுப்பேற்றார்.
இந்த சூழலில், ஜெய் ஷா வகித்த பதவியை தற்போது பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோஷின் நக்வி ஏற்றுள்ளார். இந்த நிலையில், இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் ஏற்பட்ட தாக்குதல்கள் காரணமாக, அடுத்த மாதம் நடக்க இருந்த ‘வளர்ந்து வரும் நாடுகளுக்கு இடையேயான மகளிர் ஆசியப்போட்டி’யிலிருந்து இந்தியா விலகுவதாக தகவல் பரவியது.
இதேபோல் வரும் செப்டம்பர் மாதத்தில் நடக்க இருக்கும் ஆடவர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் இந்தியா பங்கேற்காது என்ற தகவலும் வெளியானது.
இந்த நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பிசிசிஐ செயல் தலைவர் தேவஜித் சைகியா (Devajit Saikia), ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுடன் இது குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை எனக் கூறியுள்ளார். தற்போது ஐபிஎல் 2025 மற்றும் வரவிருக்கும் இங்கிலாந்து போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும் கூறினார். மேலும் ஆசிய கோப்பையிலிருந்து இந்தியா வெளியேறுகிறது என்ற தகவல் முழுவதும் கற்பனையே என்று தெரிவித்தார்.
May 20, 2025 10:30 AM IST


