புத்ராஜெயா,
நாடு முழுவதும் தனியார்துறை மேற்கொண்டிருக்கும் வீடமைப்புத் திட்டங்கள் தாமதமாவது. கைவிடப்பட்டது. சிதிலமடைந்தது போன்றவற்றிலிருந்து மீட்டெடுத்து மேம்படுத்துவதற்குரிய தனியார் வீடமைப்புத்திட்டப் பணிக்குழுக் கூட்டத்திற்கு வீடமைப்பு ஊராட்சித்துறை துணை அமைச்சர் டத்தோ ஹாஜா அய்மான் அதிரா பிந்தி சாபு தலைமையேற்றார்.
2025 ஏப்ரல் வரை 233 தனியார்துறை வீடமைப்புத் திட்டங்கள் காலதாமதம் எனப் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. 339 திட்டங்கள் கட்டி முடிக்கப்படாமல் உள்ளன என்று வகைப்படுத்தப்பட்டிருப்பதோடு 114 திட்டங்கள் கைவிடப்பட்டிருக்கின்றன என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்று ஹாஜா அய்மான் அதிரா குறிப்பிட்டார்.
அதேசமயம் 2025 மார்ச் 31ஆம் தேதி வரை ஒப்பிடுகையில் கட்டி முடிக்கப்படாமல் இருக்கும் வீடமைப்புத் திட்டங்களின் எண்ணிக்கை 360இல் இருந்து 339 திட்டங்களாகக் குறைந்துள்ளன. அதேபோல் தாமதமாகி இருக்கும் திட்டங்களின் எண்ணிக்கை 267இல் இருந்து 233ஆகக் குறைந்திருக்கிறது. கைவிடப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கை 114 என்று அவர் சொன்னார்.
இவற்றின் நிகர மேம்பாட்டு மதிப்பு 101.98 பில்லியன் ரிங்கிட்டாகும். இவற்றுள் மொத்தம் 119,954 வீடுகள் சம்பந்தப்பட்டுள்ளன. 2025 ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 30ஆம் தேதி வரை இந்தச் சிறப்புப் பணிக்குழு 11.58 பில்லியன் ரிங்கிட் நிகர மேம்பாட்டு மதிப்பீட்டைக் கொண்ட 19,205 வீடுகள் சம்பந்தப்பட்ட 166 தனியார் வீடமைப்புத் திட்டங்களை உயிர்ப்பித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இவற்றுள் 2025 ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து 2025 ஏப்ரல் 30ஆம் தேதி வரை 3.96 பில்லியன் ரிங்கிட் நிகர மேம்பாட்டு மதிப்பைக் கொண்ட 7.413 வீடுகள் சம்பந்தப்பட்ட 49 திட்டங்கள் மீண்டும் செயல்படுவதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது என்றும் அவர் கூறினார். இவற்றுக்கான மேம்பாட்டுப் பணிகள் மிகவும் சுமுகமாக மேற்கொள்ளப்படுவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
2025 ஏப்ரல் மாதம் வரை கைவிடப்பட்ட இரண்டு வீடமைப்புத் திட்டங்கள் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. 392 வீடுகள் சம்பந்தப்பட்ட 50.76 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட நிகர மேம்பாட்டு மதிப்பைக் கொண்டதாகும். பகாங், மாரான் பெர்மாத்தாங் ஷா பண்டார் வீடமைப்புத் திட்டம், திரெங்கானு. கோலத்திரெங்கானு. இபாய் கோஃல்ப் வீடு ரிசோர்ட் திட்டம் ஆகியவையே அந்த இரண்டு திட்டங்களாகும்.
பணிக்குழு ஊராட்சித்துறை, தொழில்நுட்ப ஏஜென்சி பொது பராமத்து சேவைகளை வழங்கும் ஏஜென்சி ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஒத்துழைப்பின் வழி இந்த வெற்றி கிட்டியிருக்கிறது என்று ஹாஜா அய்மான் அதிரா கூறினார்.
2024ஆம் ஆண்டு முழமையிலும் 36 தனியார் வீடமைப்புத் திட்டங்களுக்கு வருகை மேற்கொள்ளப்பட்டது. 2025 ஏப்ரல் 30ஆம் தேதி வரை மேலும் 11 தனியார் வீடமைப்புத் திட்டங்களுக்கு வருகை மேற்கொள்ளப்பட்டது என்று அவர் தொடர்ந்து கூறினார்.
பிரச்சினைகளை எதிர்நோக்கி இருக்கும் தனியார் வீடமைப்புத் திட்டங்களுக்குப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குரிய வழிவகைகளை வழங்கும் ஒரு களமாக சிறப்புப் பணிக்குழு அதன் கடமையைத் தொடர்ந்து செய்து வரும் என்று அவர் உறுதி அளித்தார். வீடுகளை வாங்கியிருப்போரின் சுமைகளைக் குறைக்கும் வகையில் மடானி அரசாங்கம் இவ்விவகாரத்தில் சுமுகமான தீர்வு காணப்படுவதற்கு அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து பணியாற்றும் என்று அவர் மேலும் சொன்னார்.


