Last Updated:
தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்க கனிமொழி, சசிதரூர் உள்ளிட்ட 7 பேர் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைப்பதற்காக வெளிநாடுகளுக்கு அனுப்ப கனிமொழி, சசிதரூர் உள்ளிட்டோர் தலைமையில் ஏழு குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. அதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வந்த சூழலில் கடந்த 10 ஆம் தேதி சண்டை நிறுத்தம் ஏற்பட்டது.
இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்கும் விதமாக அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய ஏழு குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. அதன்படி, ரவி சங்கர் பிரசாத், கனிமொழி, சசி தரூர், சஞ்சய் குமார் ஷா, சுப்ரியா சுலே, பைஜெயந்த் பாண்டா (Baijayant Panda), ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் தலைமையிலான 7 குழுக்கள் இந்தியாவின் முக்கிய நட்பு நாடுகள் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக உள்ள நாடுகளுக்கு இந்த மாத இறுதியில் பயணம் மேற்கொள்ள உள்ளது.
தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைக்க அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய குழுவை ஐந்து முக்கிய நாடுகளுக்கு தலைமையேற்று நடத்திச் செல்வது மகிழ்ச்சியளிப்பதாக சசி தரூர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ஆபரேஷன் சிந்தூர் குறித்து வெளிநாடுகளுக்கு எடுத்துரைப்பதற்கான குழுக்களில், காங்கிரஸ் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட நான்கு பேரின் பெயர்களும் இடம்பெறவில்லை என்று காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.


