Last Updated:
பிளாக்ராக் (BlackRock) உலகின் மிகப்பெரிய சொத்து மேலாண்மை நிறுவனமாகும். இது டிரில்லியன் கணக்கான டாலர் முதலீடுகளைக் கையாளுகிறது.
உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் என்று சொன்னாலே, நமக்கெல்லாம் எலான் மஸ்க், பில்கேட்ஸ் மற்றும் ஜெஃப் பெசோஸ் போன்ற பெயர்கள்தான் உடனே நியாபகத்திற்கு வரும். ஆனால், இந்த ஆண்டில் அவர்கள் அனைவரையும் விட அதிகமாக சம்பாதித்த ஒருவர் அமெரிக்காவில் இருக்கிறார். அவர்தான் பிளாக்ராக் நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான லாரி ஃபிங்க்.
பிளாக்ராக் (BlackRock) உலகின் மிகப்பெரிய சொத்து மேலாண்மை நிறுவனமாகும். இது டிரில்லியன் கணக்கான டாலர் முதலீடுகளைக் கையாளுகிறது. 1988-ல் நிறுவப்பட்ட இந்நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள் என்ன தெரியுமா? வாடிக்கையாளர்கள் தங்கள் எதிர்காலத்திற்காக வேண்டிய பணத்தை வளர்க்க உதவுவதே இவர்களின் முக்கிய நோக்கம். 2024-ம் ஆண்டில், இந்நிறுவனம் அதிக லாபத்தை ஈட்டி சாதனை செய்தது. மேலும், இந்த வெற்றி லாரி ஃபிங்கின் சம்பளத்திலும் பிரதிபலித்தது.
கடந்த ஆண்டு 36.7 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.227 கோடிக்கு மேல்) சம்பாதித்துள்ளார் லாரி ஃபிங்க். இது அவரது முந்தைய ஆண்டு வருமானமான $26.9 மில்லியனை விட 33% அதிகமாகும். அவரது அடிப்படை சம்பளம் $1.5 மில்லியனாக (சுமார் ரூ.12.7 கோடி) அப்படியே நிலையாக இருப்பதாக ஃபார்ச்சூன் இதழ் கூறுகிறது. ஆனால், அவரது கேஷ் போனஸ் $7.9 மில்லியனில் இருந்து $10.6 மில்லியனாக உயர்ந்தது. மேலும், அவரிடம் உள்ள பங்குகள் $16.4 மில்லியனில் இருந்து $24.6 மில்லியனாக உயர்ந்தன.
“செயல்திறன் அடிப்படையிலான ஊதியத்தில் நாங்கள் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளோம்” என்று கூறி இந்த சம்பள அதிகரிப்பிற்கு விளக்கம் கொடுத்துள்ளது பிளாக்ராக் நிறுவனம். இருப்பினும், சிலருக்கு இது குறித்து விமர்சனம் உள்ளது. கடந்த ஆண்டு பிளாக்ராக்கின் நிர்வாக ஊதியத் திட்டத்தை 59% பங்குதாரர்கள் மட்டுமே அங்கீகரித்துள்ளதாக ஃபார்ச்சூன் அறிக்கை கூறுகிறது. இது கடந்த பத்து ஆண்டுகளில் இருந்த 93% சராசரியை விட மிகக் குறைவு.
முதலீட்டாளர்களின் கவலைகளை முறையாக நிவர்த்தி செய்யாததற்காக ப்ராக்ஸி ஆலோசனை நிறுவனமான ஐஎஸ்எஸ், பிளாக்ராக்கை விமர்சித்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, அதன் 65% பங்குகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் மற்றும் முதலீட்டாளர்களிடம் அவர்களின் கவலைகளைப் பற்றி பேசியதாக பிளாக்ராக் நிறுவனம் கூறியது. கடந்த காலங்களில் இதுபோல் செய்ததற்காக விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில், 2024ம் ஆண்டில் பங்கு ஆப்ஷன் எதுவும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி பல பிரச்சனைகள் இருந்தபோதிலும், லாரி ஃபிங்கின் வருவாய் அவரை இன்று உலகின் அதிக சம்பளம் வாங்கும் பிசினஸ் தலைவர்களில் ஒருவராக உயர்த்தியுள்ளது. பிளாக்ராக்கின் தொடர்ச்சியான வெற்றியுடன், ஃபிங்கின் செல்வாக்கும், வருமானமும் தொடர்ந்து உலகளாவிய கவனத்தை ஈர்த்து வருகிறது.
எலான் மஸ்க், பில்கேட்ஸ், சுந்தர் பிச்சை ஆகியோரைவிட அதிக சம்பளம் வாங்கும் நபர்… யார் அவர்…?


