கோலாலம்பூர்:
சிங்கப்பூரில் கல்விகற்றுவரும் இரண்டு வெளிநாட்டு மாணவர்கள், மலேசியாவில் தாம் கடத்தப்பட்டதாக ஒரு போலி கடத்தல் நாடகத்தை அரங்கேற்றி, ஏறக்குறைய 700,000 அமெரிக்க டாலரைப் பறிக்க முயற்சி செய்துள்ளனர்.
இது தொடர்பில் ஷாங் ரன்பாவோ, 23, யி யிங்ஸி, 18 ஆகிய இருவர்மீதும் கோலாலம்பூர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த மே 2ஆம் தேதி, யியின் தாயாரை ஏமாற்றி ஐந்து மில்லியன் யுவானை பெற (அமெரிக்க டாலர் $693,832) யியும் ஷாங்கும் இணைந்து நாடகமாடியதாகக் கூறப்படுகிறது.
இரு மாணவர்களும் சீனாவைச் சேர்ந்தவர்கள், சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் படிக்கின்றனர் என்று கூறப்படுகிறது.
கோலாலம்பூரில் உள்ள ஜாலான் துங்கு அப்துல் ரஹ்மானில் உள்ள ஹோட்டலில் இந்த கடத்தல் நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. ஆனால் இருவரும் ஏன் மலேசியா சென்றனர் என்பதற்கான காரணம் தெரியவில்லை.
இருவரும் சேர்ந்து ஒரு காணொளியைப் பதிவு செய்து யின் தாயாரான 40 வயது செங் ஷிவென்னுக்கு அனுப்பிவைத்தனர். அதில் யி தடுத்து வைத்திருக்கப்பட்டு கழுத்து நெரிக்கப்படுவது போலவும் காட்சிகள் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.


