Last Updated:
பாகிஸ்தான் எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த இந்திய ராணுவ வீரர் பூர்ணம் குமார் ஷா இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கடந்த மாதம் பாகிஸ்தான் எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த இந்திய ராணுவ வீரரை பாகிஸ்தான் மீண்டும் ஒப்படைத்துள்ளது.
கடந்த மாதம் ஏப்ரல் 23ஆம் தேதி (பஹல்காம் தாக்குதல் நடைபெற்ற அடுத்த நாள்) இந்திய எல்லை பாதுகாப்பு வீரர் பூர்ணம் குமார் ஷா தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றுள்ளார்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலால் இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவியது. இதனால் அவரை ஒப்படைக்கும் நடைமுறையில் சற்று காலதாமதமானது.
40 வயதாகும் பூர்ணம் குமார் ஷா மேற்கு வங்கத்தை சேர்ந்தவர். அவரை பாகிஸ்தான் அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள் என்ற செய்தி கிடைத்தவுடன், அவரது கர்ப்பிணி மனைவியும், 7 வயது மகனும், அவரது குடும்பத்தினரும் சண்டிகர் வந்தடைந்தனர். அவரை பற்றிய தகவல்கள் தெரிந்துகொள்ளவும், அவரை மீண்டும் அழைத்து செல்லவும் அவரது மனைவி வந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை 10.30 மணியளவில், அட்டாரி – வாகா எல்லையில் பாகிஸ்தான் அதிகாரிகளால் பூர்ணம் குமார் ஷா இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். எல்லை பாதுகாப்பு வீரர்கள் இதுபோல பணியின்போது தவறுதலாக எல்லை தாண்டி செல்வது வழக்கமானது தான் என்றும், இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல் காரணமாக இவரை ஒப்படைப்பதில் காலதாமதம் ஏற்பட்டதாகவும் பாகிஸ்தான் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்திய வீரர் தாய்நாட்டிற்கு திரும்பியதை அவரது குடும்பத்தினர் கொண்டாடினர். மேலும், பிரதமர் மோடிக்கும், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர். இதையடுத்து இந்திய ராணுவத்திடம் சிக்கிய பாகிஸ்தான் ராணுவ வீரர் முகமது அல்லாஹ் என்பவர் அந்நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பாகிஸ்தானால் பிடிக்கப்பட்ட எல்லை பாதுகாப்பு படை வீரர்..! 21 நாட்களுக்கு பிறகு இந்தியாவிடம் ஒப்படைப்பு..!


