சிங்கப்பூரிலிருந்து பயணம் செய்து வந்த பயணி ஒருவரை திருச்சி சர்வதேச விமான நிலைய குடிநுழைவு அதிகாரிகள் கைது செய்தனர்.
கடந்த 10 ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலையில் அவர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் என கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ விமானத்தில் பயணித்து வந்த பயணிகளின் ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்துக் கொண்டிருந்தனர், அப்போது ஒருவரின் நடத்தையில் மீது அதிகாரிகளுக்கு பலத்த சந்தேகம் வந்துள்ளது.
இதனை அடுத்து அவரை சோதித்ததில் போலி பாஸ்போர்ட்டுடன் அவர் பயணம் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் திருச்சியில் உள்ள முசிறியைச் சேர்ந்த பிரகாஷ் வேல் (38) என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
அதன் பின்னர், பிரகாஷ் குடிநுழைவு அதிகாரி கோமதியிடம் அழைத்துச் செல்லப்பட்டார், அவரின் பாஸ்போர்ட்டை சோதித்ததில் அதில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதை அதிகாரி கண்டறிந்தார்.
பின்னர், பிரகாஷ் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார், அவர்கள் அவரை கைது செய்தனர்.
இது குறித்த விசாரணை நடந்து வருகிறது.

