Little India: லிட்டில் இந்தியா MRT பிளாட்பாரத்தில் ஆடவர் ஒருவர் மயங்கி கீழே விழுந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவத்தில் முதலுதவி நிபுணர்கள் அவருக்கு இருதய இயக்க சிகிச்சை (CPR) மேற்கொண்டனர்.
பின்னர் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) துணை மருத்துவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
Little India MRT
கடந்த மே 9 ஆம் தேதி மாலை சுமார் 5:10 மணியளவில், 60 புக்கிட் திமா சாலையில் உதவி வேண்டி அழைப்பு வந்ததாக SCDF தெரிவித்தது. இது லிட்டில் இந்தியா MRT நிலையத்தின் முகவரியாகும்.
வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் இந்த சம்பவத்தை கண்ட ஒருவர் டிக்டாக்கில் படம்பிடித்துள்ளார்.
அதில் ஆடவர் பிளாட்ஃபார்ம் கதவுகளுக்கு அருகில் தரையில் படுத்துக் கிடப்பதையும், அதே நேரத்தில் கருப்பு சட்டை அணிந்த பெண் ஒருவர் அவருக்கு CPR உதவி செய்வதையும் காணமுடிந்தது.
சில பயணிகள் மற்றும் SBS டிரான்சிட் நிலைய ஊழியர்கள் அவரைச் சுற்றி கூடி நின்றதையும் காண முடிந்தது.
துணை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்க்கு வருவதற்கு முன்பு முதலுதவி செய்பவர்கள் மாறி மாறி அந்த ஆடவருக்கு CPR செய்ததாக டிக்டாக் பயனர் காணொளி தலைப்பில் எழுதினார்.
இறுதியாக அந்த நபர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக SCDF தெரிவித்தது.
அவர் வெளிநாட்டு ஊழியர் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், அவர் யார் என்ற தகவல் உறுதியாக வெளியாகவில்லை.
அவரின் தற்போதைய நிலை என்ன என்பதும் உறுதியாக அறிய முடியவில்லை.

