Last Updated:
இந்திய அணி இங்கிலாந்து தொடருக்கான வீரர்கள் பட்டியலை விரைவில் அறிவிக்க உள்ளது.
இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா முக்கிய முடிவெடுத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணி இங்கிலாந்திற்கு சென்று 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வரும் மே மாதம் 24ஆம் தேதி வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், அணியில் யார் யாரெல்லாம் இடம்பெறுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சமீபத்தில் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் தனது ஓய்வை அறிவித்திருந்தார். இதையடுத்து விராட் கோலியும் ஓய்வு பெறுவதாக பிசிசிஐயிடம் கூறியதாக தகவல் வெளியானது. மேலும் கடைசியாக அஜித் அகர்கர் விராட் கோலியிடம் பேசும்போதும், விராட் கோலி தனது முடிவில் உறுதியாக இருந்ததாக கூறப்பட்டது.
இதனால் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணி குறித்து பல கேள்விகள் எழுந்தன. கேப்டனாக யார் இருப்பார்? விராட் கோலியின் இடம் குறித்த சந்தேகங்கள் அதிகரித்தன. கடந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பையின்போது முதல் டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரீத் பும்ரா கேப்டனாக இருந்தார். அந்த போட்டியில் இந்திய அணி பெரும் வெற்றியை பெற்றது.
எனவே வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பும்ரா தான் கேப்டனாக இருப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், பிசிசிஐ அடுத்த 10 வருடங்களை மனதில் வைத்து கேப்டனை தேர்வு செய்யப்போவதாக தகவல் வெளியானது. மேலும் ஷுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரில் ஒருவரை கேப்டனாகவும், மற்றொருவரை துணை கேப்டனாகவும் நியமிக்க பிசிசிஐ திட்டமிடுகிறது என தகவல் வெளியானது.
இந்த நிலையில் தான், ஜஸ்பிரீத் பும்ரா அடுத்த கேப்டனுக்கான போட்டியிலிருந்து வெளியேறுவதாக கூறியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 5 டெஸ்ட் போட்டிகளில் காயமில்லாமல் விளையாட முடியுமா என்ற சந்தேகத்தை அவர் எழுப்பியதாகவும், தனக்கு மேலும் அழுத்தம் வேண்டாம் என செலக்டர்களிடம் அவர் கூறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் மேற்கூறியபடி சுப்மன் கில் தான் இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இளம் வீரர்களுடன் அனுபவமிக்க விராட் கோலி இருப்பது அவசியம் என பிசிசிஐ நினைக்கிறது. அதனால் விராட் கோலியிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. அவர் அணியில் இருப்பாரா, கேப்டன் பதவி யாருக்கு என்பது போன்ற அனைத்து கேள்விகளுக்கான விடைகளும், இந்திய அணியை அறிவிக்கும்போது தெரியவரும்.


