Last Updated:
பாகிஸ்தான் அத்துமீறலை அடுத்து காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலத்தின் எல்லை பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதேபோல் ராஜஸ்தானின் பொக்ரான் பகுதியில் ஒரே நேரத்தில் 8 ட்ரோன்கள் பறந்தன. இதனால் பொக்ரான் நகர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன.
புரிந்துணர்வை மீறி நடந்த அத்துமீறலுக்கு பாகிஸ்தானே பொறுப்பு என்று வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே உச்சகட்ட பதற்றம் நிலவிய நிலையில், தாக்குதலை நிறுத்துவதற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாகிஸ்தானின் இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர்கள் ஜெனரல், இந்திய ராணுவத் தளபதி உடன் மாலை 3.35 மணிக்கு தொலைப்பேசியில் தொடர்புகொண்டு உரையாடியதாகத் தெரிவித்தார். அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் சனிக்கிழமை மாலை 5 மணி முதல் அனைத்து விதமான ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்த இருநாடுகளும் ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்தார். அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை வரும் 12ஆம் தேதி மதியம் 12 மணியளவில் நடைபெறும் என்றும் கூறினார்.
இந்நிலையில், காஷ்மீரில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியானது. பாக். கோரிக்கையை ஏற்று மாலை 5 மணி முதல் தாக்குதல் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் ஜம்மு காஷ்மீரின் கதுவா, சம்பா, சுந்தர்பானி, அக்னூர், உதம்பூர், நவ்ஷேராவில் அத்துமீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதனால் எல்லை பகுதியில் மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது. எனினும் இந்த தாக்குதலை இந்தியா முறியடித்திருக்கிறது. காஷ்மீரின் உதம்பூரில் பாகிஸ்தானின் ட்ரோனை இந்தியா முறியடித்தது.
பாகிஸ்தான் அத்துமீறலை அடுத்து காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலத்தின் எல்லை பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதேபோல் ராஜஸ்தானின் பொக்ரான் பகுதியில் ஒரே நேரத்தில் 8 ட்ரோன்கள் பறந்தன. இதனால் பொக்ரான் நகர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன. குஜராத்தின் கட்ச் மாவட்டத்திலும் ட்ரோன்கள் பறந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், பதற்றமடைய வேண்டாம் என்றும் அம்மாநில அமைச்சர் ஹரிஷ் சங்வி கேட்டுக்கொண்டார்.
இப்படி, புரிந்துணர்வு முடிவை மீறி பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்துவதால் எல்லைப் பகுதிகளில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது. இதனால் இந்தியாவின் எல்லை பகுதிகளான அமிர்தசரஸ், பதான்கோட், கார்கில், ஜெய்சால்மர், பாட்டியாலா ஆகிய இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. ஹரியானாவின் அம்பாலாவில் மின்தடை ஏற்பட்டுள்ளது.
இந்த பதற்றத்துக்கு மத்தியில் இரவில் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, “கடந்த சில நாட்களாக நடந்து வரும் இராணுவ நடவடிக்கையை நிறுத்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவ ஜெனரல்களுக்கு இடையே இன்று மாலை ஒரு புரிதல் எட்டப்பட்டது. கடந்த சில மணிநேரங்களாக, இந்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறி வருகிறது. இந்திய ராணுவம் இந்த ஊடுருவலுக்கு பதிலடி கொடுத்து சமாளித்து வருகிறது. இந்த ஊடுருவல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இதற்கு பாகிஸ்தான் பொறுப்பு. பாகிஸ்தான் இந்த சூழ்நிலையை சரியாகப் புரிந்துகொண்டு இந்த ஊடுருவலைத் தடுக்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இந்திய படைகள் நிலைமை குறித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றன. மேலும் சர்வதேச எல்லை மற்றும் கட்டுப்பாட்டுக் கோட்டில் அத்துமீறல்கள் மீண்டும் நிகழ்ந்தால் அதனை இந்திய படைகளே தங்கள் பகுதிகளின் சூழலுக்கு ஏற்ப பதிலடி கொடுக்க இந்திய படைகளுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளன.” என்று தெரிவித்துள்ளார்.
Jammu and Kashmir
May 10, 2025 11:16 PM IST
“அத்துமீறலுக்கு பாகிஸ்தானே பொறுப்பு.. மீண்டும் நிகழ்ந்தால் ராணுவத்துக்கு முழு சுதந்திரம்” – இந்தியா கடும் எச்சரிக்கை!


