Last Updated:
இந்திய ராணுவம் பாகிஸ்தானின் தாக்குதலை தடுக்க ரஷ்யாவின் S-400 வான்வழி பாதுகாப்பு கவசத்தை பயன்படுத்தியது.
பாகிஸ்தானின் ஏவுகணைகள், டிரோன்களை தடுத்து அழிக்க, ரஷ்ய தயாரிப்பான ‘எஸ் 400’ என்ற வான்வழி பாதுகாப்பு கவச முறையை இந்திய ராணுவம் பயன்படுத்தியது. இந்த பாதுகாப்பு கவசத்தின் சிறப்பம்சங்கள் குறித்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
360 டிகிரி சுழன்றடிக்கும் S-400 சுதர்சன் சக்ரா பாதுகாப்பு கவசம், பாகிஸ்தானின் தாக்குதலை இடைமறித்து அழிப்பதில் சிறந்த பங்களித்து, அதன் வலிமையை உலகிற்கு பறைசாற்றியுள்ளது.
வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் திடீரென பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. ஜம்மு, உதாம்பூர், ஜெய்சல்மர், பஞ்சாப் உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை நடத்தியது.
பாகிஸ்தான் நம் நகரங்களை குறிவைத்து அனுப்பிய ஏவுகணைகள், டிரோன்களை தடுத்து அழிக்க, ரஷ்ய தயாரிப்பான ‘எஸ் 400’ என்ற வான்வழி பாதுகாப்பு கவச அமைப்பை இந்தியா களத்தில் இறக்கியது. இந்த ‘எஸ் 400’ பாதுகாப்பு கவசம் பாகிஸ்தானின் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை சின்னாபின்னமாக்கி அந்நாட்டு ராணுவத்துக்கு அதிர்ச்சி கொடுத்தது. இந்திய எல்லைக்குள் வரும்முன்னே பாகிஸ்தான் எல்லையிலேயே பல ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் அடித்து வீழ்த்திய பிரமிக்க வைத்தது S-400 சுதர்சன் சக்ரா. இது பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல சீனாவுக்கும் மறைமுக செய்தி என்பது ராணுவத்தின் முன்னாள் அதிகாரிகளின் கருத்தாக உள்ளது.
S-400 என்பது ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட ஒரு நவீன நீண்ட தூர வான் கவச ஏவுகணை அமைப்பாகும். இதனால் 600 கிலோமீட்டர் தொலைவில் இருந்து வரும் ஏவுகணைகளை கண்காணிக்க முடியும். 400 கிலோமீட்டர் எல்லைக்குள் வரும் உளவு விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் டிரோன்களைக் கண்டறிந்து அழிக்க முடியும். இந்த ஏவுகணைகள் மணிக்கு சுமார் 17,000 கிமீ வேகத்திலும், 10 மீட்டர் முதல் 30 கிலோமீட்டர் வரை உயரத்திலும் பறக்கும் இலக்குகளை சுக்குநூறாக்கும் திறன் கொண்டவை. ஆசியாவிலேயே இந்த பாதுகாப்பு அமைப்பு இந்தியாவில் மட்டுமே உள்ளது.
அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி, ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட S-400 வான் தாக்குதல் பாதுகாப்பு அமைப்பின் ஐந்து பிரிவுகளை வாங்குவதற்காக இந்தியா 2018 ஆம் ஆண்டில் தோராயமாக 35,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இவற்றில், மூன்று பிரிவுகள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளன, அவை பாகிஸ்தான் மற்றும் சீனா எல்லையில் நிறுவப்பட்டுள்ளன. மீதமுள்ள இரண்டு பிரிவுகள் 2026 க்குள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வான்வழி பாதுகாப்பின் அரணாக சுழன்றடிக்கும் இந்த எஸ்-400 சுதர்சன் சக்ரா நாட்டின் ராணுவ வலிமையின் சக்தியாக திகழ்கிறது.
May 10, 2025 11:43 AM IST


