Last Updated:
இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு தள்ளிவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. 57 லீக் போட்டிகள் முடிந்த நிலையில், பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதல் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்துக்கு மட்டும் நிறுத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
கடந்த மாதம் 22-ஆம் தேதி தொடங்கிய 18-ஆவது ஐபிஎல் தொடரில் 57 லீக் போட்டிகள் நிறைவடைந்தன. இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றமான சூழல் காரணமாக, நேற்று தர்மசாலாவில் நடைபெற்ற பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான 58-ஆவது லீக் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஐபிஎல் போட்டிகள் தொடர்ந்து நடத்தப்படுமா என்பது குறித்து உரிய ஆலோசனைக்குப் பிறகு அறிவிக்கப்படும் என ஐபிஎல் தலைவர் அருண் துமால் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடர் காலவரையறையின்றி நிறுத்தி வைக்கப்படுவதாக முதலில் தகவல் வெளியானது.
இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்துக்கு மட்டும் நிறுத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐபிஎல்லின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உரிய ஆலோசனைக்குப் பிறகு ஐபிஎல் நிர்வாகக் குழு இந்த முடிவை எடுத்தது. நமது ஆயுதப் படைகளின் வலிமை மீது பிசிசிஐ முழு நம்பிக்கை வைத்திருக்கும் அதே வேளையில், பங்குதாரர்களின் நலனில் அக்கறை செலுத்துவதும் அவசியமானது என்று கருதுகிறோம். மேலும் அனைத்து உரிமையாளர்களும் தங்கள் அணி வீரர்களின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்தனர். எனவே ஐபிஎல் போட்டிகளை ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைக்கிறோம்.
இந்த முக்கியமான கட்டத்தில், பிசிசிஐ தேசத்துடன் உறுதியாக நிற்கிறது. மேலும், இந்திய அரசு, ஆயுதப்படைகள் மற்றும் நாட்டு மக்களுடன் இணைந்து எங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம். சமீபத்திய பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் பாகிஸ்தானின் ஆயுதப்படைகளின் தேவையற்ற ஆக்கிரமிப்புக்கு உறுதியான பதிலடியை தரும் இந்திய ஆயுதப்படைகளின் துணிச்சல் மற்றும் தன்னலமற்ற சேவைக்கு பிசிசிஐ மரியாதை செலுத்துகிறது.” என்று கூறப்பட்டுள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu


